Pages

Tuesday, March 20, 2012

17 VizhiththezhuvOm

         
                           


        விழித்தெழுவோம்!!!

                                    1      

நிலவளமும் நீர்வளமும் நிறைந்திட்ட நாடு !
நீண்டதொரு கடலெல்லை அமைந்திட்ட நாடு !
பலவளமும் பவளமென விளைந்திட்ட நாடு !
பண்பாடு பண்பாடு மலிந்திட்ட நாடு !
மலைவளமும் கனிவளமும் செறிந்திட்ட நாடு !
மாற்றாரும் வேற்றாரும் விரும்பிட்ட நாடு !
கலையுலவும் ஆன்மீகம் விளங்கிட்ட நாடு !
காசினியில் நிகரின்றி இலங்கிட்ட நாடு !

                                    2

கண்டமர்ந்த ஞானியர்கள் பிறந்திட்ட நாடு !
கற்றறிந்த மேதையர்கள் நிரம்பிட்ட நாடு !
எண்டிசையும் சித்தர்களைக் கண்டிட்ட நாடு !
ஏழிசையை இன்னிசையாய்க் கொண்டிட்ட நாடு !
பண்டிதரும் பாவலரும் உலவிட்ட நாடு !
பகைவர்களும் அமைதிதனில் நிலவிட்ட நாடு !
விண்டிடவும் முடியாத வேதனையில் வாட ,
விடுதலையைத் தடுமாற விட்டிட்ட நாடு !


                                    3

கடாரம்வென் றாரென்று கதைகள் கேட்டோம் !
கூடாரம் நின்றின்று வதைகள் ஏற்றோம் !
நாடாகச் சென்றன்று வணிகம் செய்தோம் !
நாட்டோரை உணவுக்கின் றலையச் செய்தோம் !
கூடாரின் படைவென்று அணிகள் செய்தோம் !
கெடுப்பாரைத் தடையின்றி உலவச் செய்தோம் !
வாடாமல் பணிவாய்ப்பு நிறையப் பெற்றோம் !
தேடியெதும் கிடைக்காமல் தெருவில் உற்றோம் !

                                    4

தேறுதலைத் தருகின்ற தேர்தல் இல்லை !
தக்காரே நிற்கவெனும் நேர்தல் இல்லை !
மாறுதலைச் செய்திடவோ மனமே இல்லை !
மக்கள் நிலை மாற்றிடவோ பணமே எல்லை !
ஆறுதலை மக்களுக்குத் தரவும் இல்லை !
அடிக்கின்ற கொள்ளைக்கு வரைவும் இல்லை !
கூறுகிறார் பூனையெனப் பார்க்கின் றாராம் !
குடிக்காமல் பாலினையும் காக்கின்றாராம் !

                                    5

கண்ணாகச் சுதந்திரத்தைக் காத்தற் குத்தான் ,
கணமேனும் முனைந்திடுவா ரேன்றே மாந்தோம் !
மண்ணாகும் நம்வாழ்வு மலர்தற் குத்தான் ,
மகிழ்வோடு வினைபுரிவா ரென்றே மாந்தோம் !
உண்ணாமல் உறக்கமிலா நிலை மாற்றத்தான் ,
உழைத்திடுவார் என்றெண்ணி நாமே மாந்தோம் !
என்ணாமற் செய்வதெதும் இழிவென் றேதான் ,
எண்ணாமற் செய்ததனால் நன்கே மாந்தோம் !

                                   6

மண்ணாண்ட மன்னர்களை விலகச் சொன்னோம் !
மாட்சியெதும் இல்லாரை ஆளச் சொன்னோம் !
விண்ணீண்ட புலமையையும் உலையில் வைத்தோம் !
உருக்குலைந்த வீணரையோ தலையில் வைத்தோம் !
பன்னீண்ட அசுரரென அறிந்தி டாமல் ,
பயனவரால் இல்லையெனத் தெரிந்தி டாமல் ,
கண்ணீண்ட நங்கையென நம்பி அந்தோ !
கவர்ந்த வெறும் பேச்சினிலே கருத்தி ழந்தோம் !


                                7

ஏங்குமொரு எளியோனும் இல்லை யென்றே ,
எங்குமொரு மொழியாகச் செய்வோ மென்றார் !
வீங்குபெருந் தோளிருக்க வறுமை என்றும் ,
வீழ்ச்சியுறச் செய்திடுமோ ? உழைப்போ மென்றார் !
நீங்குமினித் துயர்களெலாம் நிற்கா தென்றார் !
நெறிகளுண்டு வழிகளுண்டு நிறைய என்றார் !
பாங்குநிறை திட்டங்கள் பலஉண் டென்றார் !
பகுத்திடுவோம் ;தொகுத்திடுவோம் ;தூங்கோ மென்றார் !

                               8

ஏக்கமதைப் போக்கிடுவோம் ;ஏற்றம் தேடும் ,
ஏழையரை உயர்த்திடுவோம் ;இனிதாய் வாழும் ,
நோக்கமதைக் கொண்டுள்ளோம் ;எனவே எங்கும் ,
நோய் நொடிகள் அகற்றிடுவோம் ; துணிவாய் என்றே ,
வாக்களித்தார் ;வாழ்வளிப்போம் என்றார் அன்றே !
வாக்களித்து ,வாக்குகளைக் கவர்ந்து சென்றே ,
வாக்களித்த படிநமது வாழ்க்கை தேனாய் ,
ஆக்கவில்லை ;அழித்து விட்டார் ;ஆண்டி யானோம் !

                                9

இருப்பானோ பிறர் பொருள்மேல் விருப்பம் வையான் !
எதுவரினும் தன்னலத்தைக் கருத்தில் வையான் !
நெருப்பாகப் பொதுவாழ்வைப் புறத்தே வைப்பான் !
நீதியைத்தன் கண்ணாக அகத்தே வைப்பான் !
இல்லானோ வாய்ப்புவரின் பொல்லான் ஆவான் !
எல்லாம்தன் வயமாக்கும் வல்லான் ஆவான் !
எல்லையிலா அன்புநிறை நல்ல எண்ணம் ,
இருப்பானும் இல்லானும் என்றே சொன்னேன் !

                                10

நல்லவராய் ஆண்டிருப்பர் என்றே மாந்து ,
நடுத்தெருவில் ஆண்டிகளாய் நாம் நிற் கின்றோம் !
பொல்லாங்கை வென்றிடுவர் என்றே மாந்து ,
புதைசேற்றில் படுதுயரில் நாம்வாழ் கின்றோம் !
இல்லாமை போக்கிடுவம் என்றார் ;வீட்டில் ,
இருப்பதுவும் போயிடுமென் றேமாள் கின்றோம் !
கொல்லாமை அஹிம்சைஎனச் சொன்ன நாட்டில் ,
கொடியோர்கை ஓங்குவதும் காண்கின் றோமே !


                               11

தன்குடும்பம் உயருமெனத் தான்சொன் னாரா ?
தானுயரத் தான்திட்டம் உண்டென் றாரா ?
உன் தோளும் என் தோளும் உழைக்கும் என்றால் ,
உற்றபல பதவியவர்க் குண்டென் றாரா ?
வன்முறையால் சாதிப்போம் எனச்சொல் கின்றார் !
வருமிடரை நாமேற்போம் என்ப தாலா ?
என்முறைக ளென்றாலும் கைக்கொள் கின்றார் !
இன்னலெனில் ஏற்பதுநாம் என்ப தாலா ?

                                12

எதிர்ப்போரை அழிப்பதுவே கருத்து என்றார் !
எதிர்கொள்ளப் புதுவழிகள் வகுத்துச் சொன்னார் !
துதிப்போர்க்குத் துண்டாகத் தொகுத்துப் போட்டார் !
தோதாகச் சொத்தெல்லாம் பகுத்துப் போட்டார் !
கதியில்லா ஏழையுடல் கருத்துப் போனார் !
கதைவிட்டார் செல்வத்தில் பெருத்துப் போனார் !
விதியென்று நாம்தினமும் மயங்கு கின்றோம் !
விடியல்நமக் கெய்திடுமா ? உறங்கு கின்றோம் !

                                13

ஊனுருக்கும் பசிக்கொடுமை அவர்க்கு இல்லை !
உதிரத்தைச் சிந்தும்நமக் குணவு இல்லை !
தானிருந்த நிலைதன்னை நினைக்க வில்லை !
தவிக்கின்ற மக்கள்நிலை நெஞ்சில் இல்லை !
ஏனென்று கேட்பதற்கோ  உரிமை இல்லை !
ஏற்றவழி வாக்கருமை தெரிய வில்லை !
தானென்னும் அகந்தைதலை சாய்க்க ஈண்டு ,
தக்காரை ஏற்றிடயோ சிக்க வேண்டும் !

                               14

நாக்கூசா தூழலினால் ஆகும் காசு ,
நமக்கேதான் வினையானால் ? என்று யோசி !
வாக்குக்கு விலையீந்தால் யாரை நோக ?
வாங்கிஅதை ஏமாந்தால் எங்கே போக ?
நோக்கத்தில் பிழையிருந்தால் நம்மைக் காக்க ,
நூறுகட வுள்வந்தால் என்ன செய்ய ?
வாக்கெடுத்து வருவீரேல் வல்லார் நோக்கி ,
வழிநடத்தச் சொல்வீரேல் வாழ்வோம் ஐயா !


                              15

அதுசெய்தோம் இது செய்தோம் என்பார் ஜோராய் ;
அத்தனையும் அவர்வாழத் தானே பாராய் !
எது செய்தார் இந்நாடு உயரக் கூறாய் !
எத்தனையோ இலவசங்கள் என்பார் கேளாய் !
விதை நெல்லாய் இருந்தபல திட்ட மாட்சி ,
வீணாக்கி விட்டதுதான் கண்ட காட்சி !
கதையாகிப் போனதுதான் கண்ணீர் பாய்ச்சி ,
காந்தியவர் நமக்களித்த மக்கள் ஆட்சி !

                              16

மன்னர்களும் ஆண்டிருந்தார் ஒருகா லத்தில் ;
மக்கள்நிலை மறக்கவிலை அவர்கா லத்தில் !
இன்னலெனச் சொன்னாலே ஒரு கணத்தில் ,
ஏற்புடைய செய்திடுவார் அரைக் கணத்தில் !
உன்னதமாய் இருந்திட்ட அந்த மாண்பு ,
ஒழிக்கவெனப் போராடி யன்றோ மாண்டோம் ?
சொன்னார்கள் ஜனநியாயம் சுகமே என்றே ;
சுகமெல்லாம் அவர்க்குத்தான் என்றே கண்டோம் !

                              17

மந்திரிகள் இருக்கின்றார் இக்கா லத்தில் ;
மக்கள்நிலை உயர்த்துகிறார் நொடிக்காலத்தில் ;
சந்தேகம் வேண்டாமே மக்கள் என்றால் ,
நாமல்ல ;அவர் பெற்ற மக்கள் அன்றோ ?
மந்திரமாய் வாய்ச்சாலம் பேசி எங்கும் ,
வஞ்சித்தே பஞ்சணையில் சாய்ந்து தூங்கி ,
தந்திரமாய்ப் பேசுகிறார் உழைப்ப தென்னோ ,
தரித்திரத்தை வாழ்வினிலே ஒழிக்கத் தானாம் !

                              18

கல்வியையும் விற்பனையில் ஒன்றாய்க் கண்டோம் !
கண்ணீரே தண்ணீருக் கென்றே கண்டோம் !
பல்விதமாய் விலைகளெலாம் உயரக் கண்டோம் !
பகற்கொள்ளை மருத்துவ மாய் மாறக் கண்டோம் !
செல்லரித்துச் சட்டங்கள் போகக் கண்டோம் !
செயலற்ற நிர்வாகம் ஆகக் கண்டோம் !
நல்லரவ மாய்ப்பலரும் உலவக் கண்டோம் !
நச்சரவம் நன்று எனும் நிலையே கண்டோம் !


                              19

வன்முறைகள் நாடெங்கும் மலியக் கண்டோம் !
வழிமுறைகள் கேடாக விளையக் கண்டோம் !
என்முறையும் தம்முறையாய்க் கொளவே கண்டோம் !
இழிமுறைகள் செய்வதுவே தொழிலாய்க் கண்டோம் !
நன்முறைகள் நாள்தோறும் மறையக் கண்டோம் !
நெறிமுறைகள் செயல்தோறும் குறையக் கண்டோம் !
தன்குறைகள் தடமாற்றிப் பேசக் கண்டோம் !
தனிமனித ஒழுக்கத்தின் நாசம் கண்டோம் !

                              20

முத்தான வழிகெட்ட நிலை மாற்றத் தான்,
முன்னோர்கள் முன்சொன்ன கதை கேட்டுத்தான் ,
சத்தான நீதிநிறை மொழியேற் றுத்தான் ,
சாதிகளை முன்னிறுத்தும் சதியோட் டத்தான் ,
சத்தியத்தை மறுத்திட்டோர் தலை சாயத்தான் ,
சதிகாரர் நிலையின்றி அலை பாயத்தான் ,
உத்தமர்க்கே வாய்ப்புஎன அரும் பற்குத்தான் ,
உணர்வுதனைப் பெறுவமென விரும்பு கிறேன்நான் !

                              21

மண்குடிசை கல்வீடாய் மாற்று வதுபோய் ,
மாடிகளை மாளிகையாய் மாற்றிக் கொண் டார் !
எண்ணெழுத்து ஏணியென இருந்த நிலைபோய் ,
இருப்பதுவும் அதிகமெனத் தூற்றிக் கொண்டார் !
எண்ணிடுவோம் எதிர்காலம் என்பதெ லாம்போய் ,
இலவசமே போதுமென ஏற்றுக் கொண்டார் !
கண்ணான பழமையெலாம் காத்த தெலாம்போய் ,
கண்டபடி மாற்றுவதைப் பீற்றிக் கொண்டார் !

                              22

இலவசங்கள் பெறுவதனால் எதிர்கா லத்தை ,
இருளினிலே ஆழ்த்துகிறோம் எனம றந்தோம் !
நிலவுகிற திட்டங்கள் முன்னேற் றத்தை ,
நினைக்காமல் வீழ்த்துவதால் நமை மறந்தோம் !
நிலைகுலைக்கும் வேலையிலா திண்டாட் டத்தை ,
நீக்குகிற வழியனைத்தும் நாம்து றந்தோம் !
அலைமோத நமதுஇளை ஞர்கூட் டத்தை ,
ஆக்குகிற அத்தனையும் நாம் புரிந்தோம்!


                              23

இப்படியே இருந்திட்டால் என்ன ஆகும் ?
இளைஞர்களின் எதிர்காலம் இருண்ட தாகும் !
எப்படியும் இருந்திடலாம் என்ற எண்ணம் ,
எல்லோர்க்கும் ஏற்படலாம் ;ஒன்று திண்ணம் !
செப்படியில் வருவதிலை அந்த மாற்றம் !
செயலால்தான் வந்திடுமாம் நம்முன் னேற்றம் !
தப்படியை வைக்காமல் தயங்கி டாமல் ,
தருணமெனத் தரணிதனில் இயங்கு வோமா ?

                              24

வம்புவதை ஒழிப்போரின் வழி காணுவோம் !
வழிமாறும் இழியோரின் பிழை தூற்றுவோம் !
நம்புவதை நாடாரின் செயல் நாணுவோம் !
நற்பண்பு தேடாரின் புயம் மாற்றுவோம் !
செம்மாந்த நெறி ஏற்று உடன் மாணுவோம் !
செயலாற்ற நில்லாரைப் புறம் போக்குவோம் !
ஏமாந்த கதைபோதும் குணம் பேணுவோம் !
எமைக்காக்கும் நல்லோரைத் தொழு தூக்குவோம் !

                              25

ஊழலிலா சமுதாயம் ஆக்கச் சொன்னோம் ;
ஊழலிலே சமுதாயம் திளைக்கச் செய்தார் !
சூழலிலே சமதர்மம் சமைக்கச் சொன்னோம் !
சாதியினால் அதர்மமெலாம் தழைக்கச் செய்தார் !
வாழுலகம் ஒன்றுபட வைக்கச் சொன்னோம் !
வழிசெய்தே இரண்டுபடக் கலகம் செய்தார் !
சூழுவகை எல்லாமே பாழாக் கித்தான் ,
சுற்றிலுமே நல்லதெலாம் அழியச் செய்தார் !

                              26

மண்ணாள வழிசெய்தார் மக்கள் என்பார் !
மன்றத்தில் மக்கள்குரல் கூடா தென்பார் !
மக்கள்குரல் கேட்காத மன்றம் தானும் ,
மக்கள்நிலை மாற்றுவது எங்ஙன் ஆகும் ?
சட்டத்தின் முன்யாரும் சமமே என்றால் ,
சரிபாதி பேருக்கு விலக்கு ஏனாம் ?
விட்டத்திற் பூனையது பாய்ந்தாற் போலே ,
விழிமூடிச் சொன்னதையே சொல்வார் மேலே !


                              27

மக்களுக்கு உதவாத சட்ட மன்றம் ,
மரபுவழி யானாலும் மாற வேண்டும் !
சிக்கலுக்கு விடைகாணச் சொன்னால் இங்கு ,
சிறுபான்மை பெரும்பான்மை என்பார் நன்கு !
ஊழலுக்குத் துணைபோக வேண்டா மென்று ,
விதிசெய்யத் தயங்குவதேன் ? ஆள்வோர் இன்று !
விழலுக்கு இறைத்திட்ட நீராய் என்றும் ,
விடலாமா ? நாமளித்த வாக்கை மன்றம் !

                              28

கழலுக்கு அடிபணிந்த காலம் எல்லாம் ,
காட்டாற்று வெள்ளமென ஆன தென்போம் !
மழலையராய்ச் சொற்கேட்ட மடமை யெல்லாம் ,
மண்மூடிப் பழங்கதையாய்ப் போன தென்போம் !
எழுவதென விழித்திட்ட மக்கள் கூட்டம் ,
ஏற்றிடுமோ ? இவர்களுடை வீண்ஆர்ப் பாட்டம் !
உழுவதற்குப் புறப்பட்ட உழவர் ஏரை ,
விழுவதற்கு அனுமதியார் ;தொடுப்போம் போரை!

    
                                  

No comments:

Post a Comment