Pages

Monday, March 19, 2012

13 VilangukaLa naam ?

                                                                             
                                                        Vilangukalaa naam ?                                      


                                                                             

           

                                               விலங்குகளா?நாம்?
                                                   
                                                   1
                               
பசும்புல்லைத் தின்று பாலைக் கொடுக்கும் -- பசு
பள்ளிக்குச் சென்றங்கு பாடம் படிக்கவில்லை !
கொள் தின்னும் வாயில் கடிவாளம் பூட்டிக் ---குதிரை
பள்ளிக்குச் சென்றோடப் பாடம் படிக்கவில்லை !
ஓய்வின்றி வயலிலே உழவு செய்யும் --மாடு
ஒருநாளும் உழைப்பைப் பள்ளியில் படிக்கவில்லை !
போட்டதைத் தின்றே நம் வீட்டைக் காக்கும் --நாய்
ஓட்டத்திற் சென்றென்றும் பள்ளியில் கற்றதில்லை !
கொத்தித் திரிந்தே நமக்குக் குஞ்சுகளும் -முட்டைகளும்
கொடுக்கக் கோழி என்றும் பள்ளிக்குச் செல்லவில்லை !
பொதி தூக்கும் கழுதைகளும் ஒட்டகங்களும் --என்றும்
பைதூக்கிச் சென்றங்கு பாடத்தைக் கற்றதில்லை !
பள்ளிக்குச் சென்றும் நாம் என்றும் --பண்பாடு
படிக்கவில்லை என்றால் என்ன வேறுபாடு ?
அவற்றுக்கும் நமக்கும் என்று நிமிடமேனும் --கொஞ்சம்
நினைத்துப் பார்த்திட்டால் நிமிருமா நெஞ்சம் ?
                                                                                       
                                                                                   
                                                                            2

கவலை தீர்க்க என்றும் கானம் பாடும் --குயில்
கணமேனும் பள்ளியில் பாடம் படிக்கவில்லை !
தோகை தனைவிரித்தே ஆட்டம் ஆடும் --மயில்
தொலைதூரம் சென்றெங்கும் பள்ளியில் கற்றதில்லை !
உயரத்தில் பறந்தாலும் ஊரைச் சுத்தம் --செய்யும்
ஊன்தின்னிக் கழுகுகள் பாடம் படிக்கவில்லை !
பயிரைக் காக்கவெனப் புழுவைப்பிடித்--துன்னும்
பட்டுக் குருவி என்றும் பள்ளியில் கற்றதில்லை !
திட்டமிட்டே வாழ வலைபின்னும் --சிலந்திகள்
திசைமாறி ஒருநாளும் பள்ளிக்குச் செல்லவில்லை !
தித்திக்கும் தேன்சேர்க்கும் தேனீக்கள் --என்றேனும்
தெருவோரப் பள்ளியில் பாடத்தைக் கற்றதில்லை !
பள்ளிக்குச் சென்றும்நாம் என்றும் --பண்பாடு
படிக்கவில்லை என்றால் என்ன வேறுபாடு ?
அவற்றுக்கும் நமக்கும் என்று நிமிடமேனும் --கொஞ்சம்
நினைத்துப் பார்த்திட்டால் நிமிருமா நெஞ்சம் ?
     

                                                                                  
                                                                                 3

காவென்று கத்தியே ஒன்றாகும் --காக்கைகள்
ஆவென்று படித்திடப் பள்ளிக்குச் செல்லவில்லை !
கொக்கொ வெனக்கூவி எழுப்பிடும் --சேவல்கள்
கக்காவெனச் சொல்லிப் பாடம் படிக்கவில்லை !
வரிசையில் சென்றபடி இரைதேடும் --எறும்புகள்
ஒழுக்கத்தைக் கற்றிடப் பள்ளிக்குச் செல்லவில்லை !
தொங்கும் கூடுகட்டும் தூக்கணாங் --குருவிகளும்
எங்கும் பள்ளிசென்றே பாடம் படிக்கவில்லை !
வட்டமிட்டே நீரில் நீந்திடும் --வண்ணமீன்
வழிதவறி ஒருநாளும் பள்ளிக்குச் செல்லவில்லை !
இறைவன் படைத்திட்ட எல்லா --விலங்குகளும்
எங்கும் எப்போதும் பாடம் படித்ததில்லை !
பள்ளிக்குச் சென்றும்நாம் என்றும் --பண்பாடு
படிக்கவில்லை என்றால் என்ன வேறுபாடு ?
அவற்றுக்கும் நமக்கும் என்று நிமிடமேனும் --கொஞ்சம்
நினைத்துப் பார்த்திட்டால் நிமிருமா நெஞ்சம் ?

                                                                                    

                                                                                     

No comments:

Post a Comment