Pages

Wednesday, March 21, 2012

18 Row of lamps

                                                                         
                                          Lustrous tokens of radiant lives for
Happy indians















தீப ஒளி



திக்கெட்டும் ஒளிரவெனத் தீபஒளி ஏற்றுவீர் !
திக்கற்றவர் போற்றுவீர் !
தீயட்டும் தொல்லையெனத் தீமைகள் மாய்ப்பீர் !
தொலையாத பகைமை சாய்ப்பீர் !



புக்கிட்ட சிறுமைகள் களைகளெனத் தள்ளுவீர் !
புதுமைகள் பல கொள்ளுவீர் !
புல்லர்தம் கொட்டத்தைப் புறம் காண ஓட்டுவீர் !
பூமிதனில் அறம் நாட்டுவீர் !



சிக்குற்ற நம்வாழ்வு செழுமை பெறச் செய்குவீர் !
சீருற்ற வளம் எய்துவீர் !
செயலற்று நில்லாமல் புயலாக வருகுவீர் !
சிறந்தோம் எனப் பகருவீர் !

வக்கற்ற வர்மகிழ வாய்ப்புகள் வழங்குவீர் !
வாழ்வில்ஒளி என விளங்குவீர் !
வயிற்றுக்கு உணவுதரும் வழிகளை எண்ணுவீர் !
வாஞ்சையது மிக நண்ணுவீர் !



இரப்பவரும்இல்லையெனச் சொல்லுநிலை வகுப்பீர் !
இல்லாரின் துயர் அறுப்பீர் !
இனிமையாய் வாழவென இலக்கணம் தொகுப்பீர் !
இன்னலும் வரின் பொறுப்பீர் !



பிறப்பெவரும் பேதமென வைப்பதிலை அறிவீர் !
பண்பினால் எனப் பகருவீர் !
பழியற்ற வழிபோகின் பரவிடுவர் அறைவீர் !
பாங்குகள் பல நுகருவீர் !



உறக்கமது மீறினால் சிறப்பிலை உணர்வீர் !
உற்றவழி நீர் கொணர்வீர் !
உண்மையை உண்மையாய்ப் பேசினால் உயருவீர் !
உதறினால் நீர் அயர்வீர் !


அரக்கமனம் மாய்கவென அறைகூவல் விடுப்பீர் !
அன்புடைமை கை எடுப்பீர் !
அனைவரும் ஒன்றுஎன ஆன்றமொழி உரைப்பீர் !
அறியாமை தனை மறைப்பீர் !


ஒளிபோற்றும் நாளதனைத் தீபாவளி என்று ,
உவந்திடுவர் நமது முன்னோர் !
ஒலிஏற்றி மருளகல உற்றார்கள் அன்று ,
குவிந்திடுவர் நமது முன்னர் !


சத்தான இனிப்புவகை சுவைகள்பல ஈந்து ,
சந்தோஷம் மிகத் தரட்டும் !
புத்தாடை உள்ளுக்குள் புத்துணர்ச்சி தந்து ,
புன்னகைகொண்டு வரட்டும் !

இனமென்றும் மொழியென்றும் பிரிவினை மறந்து ,
இன்புற்று உலகு மீள ,
எல்லோரும் ஒன்றுஎன ஒருமையை உணர்ந்து ,
இனிதாக என்றும் வாழ்வோம் !


முத்தான நகை சிந்தி மழலையர் மகிழ ,
மூத்தோரும் கண்டு மகிழ ,
கொத்தாகக் குடும்பத்தார் அனைவரும் மகிழ ,
குதூகலம் பொங்கி வாழ்வோம் !



No comments:

Post a Comment