
1 -சமர்ப்பணம்
( சமர்ப்பணம் , நமக்குத்தான் )
வாழ்க்கை மட்டும் , நிலையாதது அல்ல ! இந்த இளமையும் , இன்றைய நிலைமையும் , நிலையாதது தான் ! அதற்குள் , நாம் என்னவெல்லாம் , எண்ணுகிறோம் ? என்னவெல்லாம் , செய்கிறோம் ! ஆனால் , எதைப் பற்றியும் , கவலைப் படுவதில்லை ! கடைசி நேரத்தில் , கவலைப் பட்டால் போதுமா ? செய்வதை எல்லாம் , செய்து , நன்றாக அனுபவித்துவிட்டு , போகின்றபோது , காப்பாற்று என்றால் , காப்பாற்றுவது , சரி என்று , நீங்கள் நினைப்பீர்களா ? நமக்கென்ன வந்தது , என்று , நான் அப்படித்தான் , நினைப்பேன் , என்பீர்கள் ! போனால் போகிறது ; விட்டுவிடுவோம் , என்று சொல்லலாம் ! சரி ! விட்டு விடுவோம் ! அதற்கு பிரதிபலனாக , அவன் , ஒன்று , செய்தான் ; நமக்கும் , ஒன்று , அப்படி வரும்போது , நாமும் கேட்கலாமே , என்று , நினைக்க மாட்டீர்களா ? இவ்வாறு , நீ ஒன்று செய் ! நான் ஒன்று செய்கிறேன் , என்று , மாறி , மாறி , செய்துகொண்டே போனால் , இந்த உலகத்தில் , நியாயமாக , எது நடக்கும் ? சொல்லுங்கள் ! நல்லதைச் செய்து , நன்றாக அனுபவித்தால் , காப்பாற்று என்று , யாரையும் , கூப்பிட வேண்டிய , தேவை , இல்லை ! அப்படி இல்லாமல் , இப்படி , ஆளுக்கு ஒன்று வீதம் , ஆளாளுக்கு , ஒன்றொன்று , என்று செய்தால் , செய்யாதவர் , என்று , யார் இருப்பார் ? யார் யாரை , விட்டுவிடுவது ? ஆளுக்கு , ஒரு கொலை செய்ய , உரிமை இருக்கிறது , என்று , வைத்துக் கொள்வோம் ; இருக்கின்ற 100 பேரில் , 50 பேர் , முதலில் , ஆளுக்கு , ஒரு கொலை , செய்து கொள்வார்கள் ; இறந்த 50 பேர்களின் , உரிமை , பறிபோய் விட்டதே ? அவர்கள் , யாரையும் கொலை செய்யவில்லையே ? அவர்களின் உரிமை எங்கே ? எண்ணிப் பாருங்கள் ! இப்படித்தான் , நாம் , எல்லோரும் இருக்கிறோம் ! என்ன , வேடிக்கை என்றால் , நாமும் அப்படித்தான் என்று , நாம் , எண்ணுவதில்லை ! நம்மை நல்லவர்களாகவே , நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம் ;
நாளையும்.... 2—சமர்ப்பணம் !
நாய் விற்ற காசு , குரைக்காது ; பூ விற்ற காசு மணக்காது ; மீன் விற்ற காசு நாறாது ; என்றெல்லாம் சொல்வார்கள் ; அதனால் , நாம் என்னதான் , செய்ய வேண்டும் , என்று சொல்லவில்லை ! குரைத்த நாயைத் தானே , விற்றோம் ? மணந்த பூவைத்தானே , விற்றோம் ! நாறிய மீனைத்தானே , விற்றோம் ? எதை விற்றோம் , என்று பார்க்க வேண்டிய தேவை இல்லையா ? என்றால் , இல்லை ! அவர்கள் , எதை விற்றார்கள் , என்று பார்க்க வேண்டாம் ; அதை வைத்து , என்ன செய்கிறார்கள் , என்று , பார்த்தால் போதும் , என்பார்கள் ; ஒருவன் சாப்பாடு செய்து , விற்கிறான் ; வேறொருவன் , சாராயம் செய்து விற்கிறான் ; இரண்டு பேரும் , சம்பாதித்த பணத்தில் , தர்மம் செய்கிறார்கள் ! இந்த இரண்டு பேரும் , செய்வது சரியா ? சாப்பாடு வாங்கி சாப்பிட்டவர்கள் , உயிரோடு இருக்கிறார்கள் ; உழைக்கிறார்கள் ; சாராயம் வாங்கி சாப்பிட்டவர்கள் , உயிரை விட்டு விட்டார்களே ! அவர்கள் குடும்பம் , நடுத்தெருவில் நிற்கிறதே ! சரி என்று தான் , எடுத்துக் கொள்ள வேண்டுமா ? அப்படியென்றால் , நாம் பொருளை எப்படி சம்பாதித்தாலும் , அது , தவறு இல்லையா ? நாம் செல்கின்ற வழி , எப்படி இருந்தாலும் , வருகின்ற பலன் , எல்லாம் , ஒன்று தானா ? பாவம் செய்து சம்பாதிப்பதும் , புண்ணியம் செய்து சம்பாதிப்பதும் , ஒன்று தானா ? நீ எது செய்தும் சம்பாதி ! அதை நல்ல வழியில் செலவிடு , என்று சொன்னால் , நாம் , எதைத்தான் செய்ய மாட்டோம் ? தவறு செய்துவிட்டு , பேருக்கு ஒன்றிரண்டு செய்து , பரிகாரம் , தேடுவதை விட்டு , தவறே செய்யாமல் இருக்க , என்ன பரிகாரம் என்று , நாம் தேடுவதில்லையே ! அதன் பலன் தான் , இன்று , நாம் அடையும் அத்தனை துன்பங்களுக்கும் , காரணம் என்று , நாம் ஒப்புக் கொள்வதும் இல்லையே ! ஏன் ? அதற்கு காரணம் இல்லாமலில்லை : தவறு செய்கின்றவன் , எந்தவிதமான , பயமும் , கவலையும் , இல்லாமல் , சுதந்திரமாக நடமாடுகிறான் ; நாம் வைத்திருக்கின்ற , சட்டங்கள் , அவனுக்கு முன்னால் , செயலிழந்து போகின்றன ; உரிய நேரத்தில் , விரைவாக , அவன் தண்டிக்கப் படுவதில்லை ! அதனால் , அவற்றின் மீதான பயம் , அவனுக்கு , இல்லாமலேயே போய்விட்டது ! சட்டம் ஒரு வழியில் , போனால் , அவன் , மற்றொரு வழியில் போய் , தப்பித்துக் கொள்வான் ! போதாக்குறைக்கு , அவன் மற்றவர்களுக்கு , நியாயமும் பேசுவான் ; அவனுக்குப் பின்னாலும் , ஒரு பத்துப் பேர் நிற்பார்கள் ; நீ அவனை ஏன் பார்க்கிறாய் ? சட்டத்தை , ஏன் பார்க்கிறாய் ? என்று கேட்பார்கள் ! ஒரு வகுப்பில் , விழுந்து , விழுந்து படித்தவனும் , பாஸ் ! புத்தகத்தையே தொடாதவனும் , பாஸ் , என்றால் , நமக்கு , படிக்க வேண்டும் , என்ற எண்ணம் வருமா ? அவனைப் பார்த்து , நமக்கு நம்மீதே தான் , பரிதாபம் வரும் ; வேறு என்ன வரும் ? அவ்வளவு தான் , நம்மால் செய்யக் கூடியது , என்று , எண்ண வேண்டியது , வரும் ;
|
| |
3–சமர்ப்பணம்
முன்னர் சொன்ன , அந்த நிலை , பள்ளிப்படிப்போடு , நின்றுவிடும் நிலை , அல்ல ; கடைசிவரை , அதுதான் தொடரும் ; தலைப்புக்கு வருவோம் ! சமர்ப்பணம் என்பது , ஏதாவது , ஒன்றை ஒருவருக்கு தருவது ! நம் வாழ்க்கையை , என்றால் , அதை இறைவனுக்கு , அர்ப்பணிப்பது ! அப்படியெல்லாம் இறைவனுக்கு , நான் அர்ப்பணிக்க மாட்டேன் , என்று , சொல்லி , யாரும் தப்பிக்க முடியாது ; நாம் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் , நாம் கொடுத்து , அவர் ஏற்றுக் கொள்ளும் , பொருள் அல்ல , இது ! அவராகவே எடுத்துக் கொள்ளும் , பொருள் அது !
சமர்ப்பணம் என்றால் , படைத்தல் ; படைத்தல் என்றால் , கொடுத்தல் ; அர்ப்பணிப்பு என்பதற்கும் , சமர்ப்பணம் என்பதற்கும் , ஒரு வேறுபாடு உண்டு ; நாம் ஏதாவது , ஒரு பொருளைக் கொடுப்பது , சமர்ப்பணம் ; நம்மையே கொடுத்தால் , அர்ப்பணிப்பு ; அர்ப்பணிப்பு , சமர்ப்பணத்திற்குப் பிறகுதான் , வரும் ; சமர்ப்பிக்கப்படும்பொருள் , சரியாக இருந்தால் , அதைத் தொடர்ந்து , அர்ப்பணிப்பும் சரியாக இருக்கும் ; அதனால் , சமர்ப்பணத்தை , முதலில் பார்ப்போம் ; ஒரு கடைக்கு செல்கிறீர்கள் ! 5 ரூபாய் கொடுத்து , ஒரு வாழைப்பழம் கேட்கிறீர்கள் ; கடைக்காரர் , காசை வாங்கிக் கொண்டு , தொங்குகிற தாரிலிருந்து , ஒரு பழத்தைப் பிய்த்து , எடுத்துக் கொள்ளுமாறு , சொல்கிறார் ; தாரில் , சிறிதும் பெரிதுமாக , பல பழங்கள் , இருக்கின்றன : நீங்கள் , எந்த பழத்தைப் , பிய்த்து , எடுத்துக் கொள்வீர்கள் ? ஏதாவது , ஒரு பழத்தையா ? சிறு பழத்தையா ? அல்லது , பெரிய பழத்தையா ? ஒரு ஐந்து ரூபாய் பழத்தில் , என்ன வந்துவிடப் போகிறது , எதுவாக இருந்தால் என்ன , என்று , நாம் , அப்படி யோசிக்க மாட்டோம் : பெரிய பழத்தைத் தான் , தேர்ந்தெடுப்போம் ; இதில் , நாம் தான் கடவுள் : நாம் கொடுத்த காசு , கடவுள் நமக்கு , அளித்த வரம் ; கடைக்காரர் , நாம் புரிந்த செயல் ; பழம் , செயலால் விளைந்த , பலன் ; இதில் பழத்தின் , உருவம் என்பது , நல்லதா ,
கெட்டதா , என்ற , நமது செயலின் தன்மை : ஒரு பொருள் , உங்களுக்குத் தரப்படுகிறது , என்றால் , அது நல்லதா , கெட்டதா ? என்று பார்க்க மாட்டீர்களா ? எப்படி இருந்தாலும் , ஏற்றுக் கொள்வீர்களா ? தானமாகக் கிடைத்த , மாட்டின் , பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக , என்று சொல்வார்கள் ! அது , நல்ல மாடு , இல்லையென்றால் , அதை வைத்துக் கொண்டு , நாம் என்ன செய்வது ? கொடுத்தவனுக்கு , பாரம் என்று , நம் தலையில் கட்டிவிட்டால் , அதை வாங்கி , ஒரு பயனுமில்லாமல் , அதை மேய்ப்பதா , நம் வேலை ?
4-- சமர்ப்பணம்
நாம் , எந்த வகையில் , செயல் பட்டோம் ? அதற்கு , பலன் எப்படி , கிடைக்கும் , என்று , அறிந்து கொள்வதற்கு , மஹாபாரதத்தின் , இந்த , நிகழ்ச்சியைப் பார்ப்போம் ! கர்ணன் , போர்க்களத்தில் அம்புகளால் , துளைக்கப் பட்டு , விழுந்து கிடக்கிறான் !அம்புகள் செய்த , துளைகளின் வழியாக , குருதி முற்றிலுமாக , வடிந்து விட்ட நிலையிலும் , தர்மதேவதை , அவன் உயிர் , பிரிந்து விடாதபடி , இழுத்துப் , பிடித்துக் கொண்டிருக்கிறாள் ; அவன் படும் வலியை , எல்லாம் பார்க்க மாட்டாளா ? என்று , நாம் கேட்போம் ! அவன் செய்த , தர்மங்களின் பலன் , அவன் உயிர் போகாதபடி , அவனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது , என்று , அதற்கு , ஒரு வியாக்கியானமும் , சொல்வோம் ; ஆனால் , உண்மை அதுவல்ல ! காப்பாற்றுகிறது , என்றால் , வலி இல்லாமல் அல்லவா காப்பாற்ற வேண்டும் ? தர்மதேவதை , பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் ; அவன் உயிர் , அவ்வளவு , எளிதில் பிரிந்துவிடாதபடி , பார்த்துக் கொண்டிருக்கிறாள் ; அவனை தண்டித்துக் கொண்டிருக்கிறாள் ; ஏன் ? அவன் , என்ன தர்மம் செய்தான் ? கடைத் தேங்காயை எடுத்து , வழிப்பிள்ளையாருக்கு , உடைத்தான் ! அவன் செய்த , தர்மங்களுக்கான , செல்வம்
முழுவதும் , அவன் சுயமாக சம்பாதித்ததா ? அவன் , தந்தையின் சொத்தா ? இல்லை , அவன் பாட்டன் வழியாக வந்த , பூர்வீகச் சொத்தா ? யார் வீட்டுக் காசை எடுத்து , யார் தான தர்மம் செய்வது ? இரவலாக , வந்த செல்வத்தை எல்லாம் , இரவலாக , வழங்கி அழித்தான் ; இதை , தான தர்மம் என்று எப்படிச் சொல்வது ? துரியோதனன் , வழங்கினான் என்றால் , அது அவன் பெருந்தன்மை ! இல்லை , அவனுடைய சுயநலம் , அவனைத் தன் பக்கம் , தக்க வைத்துக் கொள்வதற்காக என்று , எப்படியும் வைத்துக் கொள்ளலாம் ! அவனுக்கு இவன் தேவைப் பட்டான் ! இவனுக்கோ , யார் யாரோ தேவைப் பட்டனர் ! அதை நியாயமான அன்பு , என்று சொல்ல முடியுமா ? இப்படி இருக்கும்போது , அவன் கணக்கில் , புண்ணியம் எப்படிச் சேரும் ? ஏது ? புண்ணியம் ? அதனாலேயே தர்ம தேவதை , தன் பங்குக்கு அவனை இப்போது , தண்டித்துக் கொண்டிருக்கிறாள் ; செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக , என்று சொல்லிக் கொண்டான் : ஏன் , இப்படி சொல்லக் கூடாது ? தன்னைப் பெற்று , அனாதையாக்கிவிட்டவளின் , பிள்ளைகளைப் பழி தீர்ப்பதற்காக , இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்
கொண்டான் என்று , ஏன் சொல்லக் கூடாது ? அவன் அவ்வாறு வளர்க்கப் பட்டான் , என்று சொல்லலாம் ! தெரியாதவரை அது சரி ! தெரிந்த பிறகும் , அவன் மாறவில்லையே ! அப்படி மாறிவிட்டால் , அவன் நன்றி இல்லாதவன் என்று பெயர் வந்துவிடுமே , என்றும் கேட்கலாம் ; நன்றியைக் காட்டுவதற்காக , தீயவர்களுக்குத் துணையாய் நின்றான் , அல்லவா ? நன்றி காட்டுவதற்காகத்தான் , தவறு செய்தான் என்றால் , அது தவறு இல்லையா ? அவ்வாறு அவன் செய்த , தீமைகளுக்குத் தண்டனையாகத்தான் , தர்மதேவதை , அவன் உயிரை , பிடித்து வைத்தாள் ! பாரதப் போரில் , வேறு எந்த கதாபாத்திரமும் , அனுபவிக்காத மரணவேதனையை , கர்ணன் ஏன் அனுபவித்தான் ?
5- சமர்ப்பணம்
ஒப்புரவினால் , வரும் கேடெனின் , அஃதொருவன் விற்றுக்கோள் தக்கதுடைத்து , என்றார் , வள்ளுவர் ; இவர்களுக்கு , நாம் உதவினால் , நமக்கு , தீராப் பழி வரும் , என்று தெரிந்தும் , உதவினான் என்பதற்காக , போகட்டும் , அவனை மன்னித்து , விட்டு , விடுவோம் என்று , அவள் விட்டுவிடுவாளா ? அதன் பலனைத்தான் , அனுபவித்துக் கொண்டிருக்கிறான் ! என்றாலும் , அவன் அடைந்த , மரணவலி கண்டு , மனம் இரங்கினான் , கண்ணன் ; சூரிய புத்திரன் ; அறியாமையால் , குந்தி , அகாலத்தில் , பெற்ற புதல்வன் ! ஊராரின் , அவச்சொல்லுக்குப் பயந்து , ஆற்றில் விடப்பட்டவன் ; தேரோட்டியால் , கண்டெடுக்கப் பட்டவன் ; அவனால் வளர்க்கப் பட்டவன் ; துரியோதனனால் , ஏற்றுக் கொள்ளப் பட்டவன் ; ஒரு நாட்டுக்கு , மன்னனாகவும் முடி
சூட்டப் பட்டவன் ; வசதியும் , வாய்ப்பும் , வந்தபோதும் கூட , கண்டபடி ஆடிவிடாமல் , தவறான வழியில் , செல்வத்தை இழந்துவிடாமல் , இல்லையென வந்தோர்க்கு , கொடையாக வழங்கியவன் ; நன்றிக்கடன் தீர்ப்பதற்காக , தன்னைப் பெற்றவள் , உடன்பிறந்தோர் , என , யாவரையும் , துறந்தவன் ; எல்லாமே , நமது திட்டப் படியே நடக்கிறது ; அதற்கு , இவனிடம் குறைகண்டு , அவனைத் துன்பத்தில் ஆழ்த்துவது , அழகல்ல , என்று எண்ணுகிறான் ; அவனை அமைதியாக , உயிர் துறக்கச் செய்வோம் , எனமுடிவு செய்கிறான் ;
அவன் உயிர் , பிரிந்தால் தான் , அவன் வலி தீரும் , என்று தீர்மானிக்கிறான் ; அவன் உயிர் பிரிய வேண்டுமானால் , தர்மதேவதை , அவனை விட்டு அகல வேண்டும் ! அவளிடம் சென்று , இவனை , விட்டு விலகிவிடு , என்று , சொல்வது முறையாகாது ! அது , அவள் கடமையில் குறுக்கிடுவது போலாகும் , என்று நினைக்கிறான் ; அதனால் , அதற்கு வழி , அவன் செய்ததாகச் சொல்லப் படுகின்ற , தர்மங்களைப் ,
பறிப்பது தான் ! அப்போதுதான் தர்ம தேவதையும் , அவனை விட்டு அகல்வாள் , என முடிவு செய்கிறான் ! தகாத முறையில் , தர்மம் செய்தால் , நிம்மதியாகப் போய்ச் சேரமுடியாது ! என்று , நாம் புரிந்து கொள்ள வேண்டும் ! இதைத்தான் , தர்மசங்கடம் என்று , சொன்னார்களோ? என்னவோ ? ஒரு முதியவன் வடிவெடுத்து , தள்ளாடி நடந்து , அவன் முன் போய் நின்று , கையேந்துகிறான் , கண்ணன் ; அவனைப்பார்த்த கர்ணன் , மனம் வெதும்பி , ஆவியோ நிலையிற் கலங்கியது ! யாக்கை , அகத்ததோ ? புறத்ததோ அறியேன் ! பாவியேன் , வேண்டும் பொருள் , எல்லாம் நயக்கும் , பக்குவம் தன்னில் , வந்திலையா ? என்று கேட்கிறான் !
6- சமர்ப்பணம் !
தேர் , தன் நிலையை விட்டு , நகர்ந்து விட்டதைப் போல , என் உயிர் , தன் இருப்பிடத்தை விட்டு , கிளம்பி விட்டது ! இனி திரும்பவும் , அந்தத் தேர் , நிலைக்கு வருமா ? வராதா ? என்று , சொல்ல முடியாததைப் போல , என் உயிரும் , திரும்பி , உள்ளே வருமா ? அல்லது வெளியே போயே விடுமா ? என்று , சொல்லும் நிலையில் , நான் இல்லை ! அதோடு , நீ கேட்கும் அனைத்தையும் , தரக்கூடிய ஒரு , நல்ல நிலையில் , நான் இருந்தேனே ? அன்று , நீ ஏன் வரவில்லை ? இன்று , இப்படி வந்து நிற்கின்றாயே ? ஐயா ! என்று , மனம் , நொந்து கூறினான் ! இருந்தும் , அடுத்தவன் சொத்து ஆயிற்றே , என்ற எண்ணம் இப்போதும் வராத , அவனது அப்பாவித் தனத்தைப் பார்த்து , கண்ணனுக்கு , நகைப்புதான் வருகிறது ! இவனை , எந்தவகையில் சேர்ப்பது , என்று அவனுக்கு புரியவில்லை ! சொல்கிறான் ; இல்லை , கர்ணா ? கர்ணன் , பொய் சொன்னான் , என்ற நிந்தைக்கு , ஆளாகி விடாதே ! என்றான் ,
கண்ணன் ! இதைக்கேட்ட கர்ணன் , திடுக்கிட்டுப் போய் , தனக்குத் தெரியாமல் , தன் உடலில் ஏதாவது , அணிகலன் பாக்கி இருக்கிறதா ? என்று , தன் உடல் முழுவதையும் தடவிப் பார்க்கிறான் ! புன்னகையுடன் , சொல்கிறான் கண்ணன் ; உன் மெய்யிலோ , அல்லது , உன் கையிலோ ஒன்றுமில்லை ; நீ சொன்னது பொய்யில்லை ! கர்ணா ! அது எனக்குத் தெரியும் ! என்றும் , உன் கையில் , எதுவும் இருந்ததில்லை , என்றும் , எனக்குத் தெரியும் ! ஆனால் , இப்போது , நீ சேர்த்து வைத்த , புண்ணியம் இருக்கிறதே , உன்னிடம் ! என்றும் சொல்கிறான் ; கர்ணா ! இதுவரை , நான் வாழ்ந்த காலம் எல்லாம் , தர்மம் , எதையாவது , செய்து , புண்ணியம் , தேடிக் கொள்ளும் நிலையில் , என்னை , அவன் வைக்கவில்லை ! அதனால் , போகின்ற காலத்திற்குள்ளாவது , யாசகம் பெற்றாவது கொஞ்சம் , புண்ணியம் , தேடிக் கொள்ளலாம் , என்று , உன்னிடம் வந்தேன் ; நீதான் , நிறைய வைத்திருக்கிறாயே ! என்றான் !
திடுக்கிட்டுப் போன , கர்ணன் , புண்ணியத்தையும் , யாசகம் கேட்கும் ஒருவனா ? என்று , தன் உள்ளுணர்வைச் செலுத்துகிறான் ! புரிந்து கொண்டான் ; வந்தவன் , சாமானியமான , மானுடன் அல்லன் ; மானுட வடிவில் வந்த , அந்த பரம்பொருளாகிய , கண்ணனே என , உணர்ந்து கொள்கிறான் ; அஞ்ஞானம் அகல்கிறது ; ஆத்மஞானம் , ஒளிர்கிறது ! சொல்கிறான் ; ஐயனே ! ஓவிலாது , யான்செய் புண்ணியமனைத்தும் , உதவினேன் ; கொள்க நீ ! உனக்குப் , பூவில் வாழ் அயனும் , நிகரலன் என்றால் , புண்ணியம் , இதனிலும் பெரிதோ ? என்று ! ஸ்வாமி !
இடையறாது , நான் செய்ததாகச் , சொல்லிக் கொண்டிருக்கின்ற , புண்ணியம் அனைத்தையும் , உன் காலடியில் , சமர்ப்பிக்கிறேன் ! ஏற்றுக் கொள் , என் ஐயனே ! பிரம்மன் , முதலான , எவரும் , உனக்கு நிகரானவர்கள் , இல்லை யென்றால் , நீ யார் , என்பதை எனக்குச் சொல்லவும் , வேண்டுமோ ? அத்தகைய உனக்கே , தானமாக , என் புண்ணியங்களை , வழங்கினேன் , என்றால் , இதை விட , பெரிய புண்ணியம் , வேறு எங்கே , கிடைத்துவிடப் போகிறது ? என்று , கர்ணன் கூறியதைக் கேட்ட , கண்ணன் திகைத்துப் போகிறான் ; சின்ன மீனைப் போட்டு , பெரிய மீனைப் பிடித்ததைப் போலவும் , சிறுகச்சிறுகச் சேர்த்ததை , எல்லாம் ஒன்று திரட்டி , பெருந்தொகையாக , வங்கியில் , போடுவதைப் போலவும் , இவன் , தன்னிடமே , தன் கணக்கைத் தொடங்கி , விட்டானே என்று , மகிழ்ச்சி கலந்த , ஆச்சரியம் !
தொடரும்..
7—சமர்ப்பணம் ( கழிவிரக்கம் )
ஸ்வாமி ! என் உயிராகிய தேர் , இப்போது , தன் நிலை எது ? என்ற குழப்பத்தில் , ஆழ்ந்து விட்டது ! அது , தன் பயணப்பாதையின் , இறுதிக்கு வந்துவிட்டது என்றே , எண்ணுகிறேன் ! என் இதயத்தின் , உள்ளே , அடித்துக் கொள்ளும் துடிப்புகள் , எனக்கு , மிகுந்த வலியைத் தருகின்றன ! வாழ்வதற்குத் , தகுதியற்றுப் போய்விட்ட , என்னை , அப்புறப் படுத்த , அவை , முடிவு செய்துவிட்டன , என்று , நான் அறிகிறேன் , ஸ்வாமி ! இனி , இந்த உயிர் , இந்த உடலில் , தங்காது , என்று , நான் அறிவேன் ! அதற்காக , எல்லோரையும்போல , நானும் பயப்பட வேண்டுமா ? துன்பங்களிலிருந்து , விடுபட அண்மையிலுள்ள , ஒரு தீர்வாக , அது இருக்கும்போது , நான் , ஏன் கலங்க வேண்டும் ? ஒரு நிரந்தரமான ஓய்வாக , அது இருக்கும்போது , நான் , ஏன் பயப்படவேண்டும் ? மோசமான , வசைமாரிகள் , என்மீது , பதிவு செய்யப்பட்டன ! ஏதோ ஒரு வகையில் , எப்போதும் , நான் இழிந்தவனாக , தரம் தாழ்த்தப்பட்டேன் !
சுற்றிலும் , இருந்தவர்களும் கூட , என்னை நையாண்டி செய்தார்கள் ! இயற்கையும் , எனக்கு , எதிராகச் செயல்படத் தொடங்கியது ! என் சொல்லும் , செயலும் , பிறருக்கு , அருவருப்பாகிப் போனது , என்றால் , எனக்கு இங்கே என்ன வேலை ? என் ஐயனே ! ஏனென்றால் , அவர்களுக்குத் , தக்க பதில் கூற முடியாமல் , என் நாவும் தளர்வடையத் தொடங்கி விட்டதே ! நான் ஏன் பயப்பட வேண்டும் , அண்மையில் உள்ள , தீர்வாக என் இறப்பு , இருக்கும்போது !துக்கங்களிலிருந்து , தூர நிற்க , ஒரு நிரந்தரமான , மெய்யான ஓய்வாக , அது இருக்கும்போது ! அதுதானே எனக்கு வேண்டும் !
என் உடலிலே , ஓடுகின்ற ரத்தம் , இருந்ததே ? அப்போதே தானே ,
இந்தமுடிவு வந்திருக்க வேண்டும் ? கண்ணீரைத் தவிர , வேறு எதுவும் , இல்லாத போதா , மரணத்தின் மன்னன் , என் கணக்கை , முடிக்க வேண்டும் ? அவன் தூதர்கள் , வாத்தியங்களை , இசைத்துக் கொண்டு , இதோ புறப்பட்டு விட்டார்கள் , ஐயனே ! இப்போது , நான் புதிதாகச் செய்ய , என்ன இருக்கிறது ? சொல்லுங்கள் ! இனி , இந்த உயிர் , இந்த உடலில் , தங்கினாலும் தங்கவில்லையானாலும் , நான் செய்வதற்கு என்ன இருக்கிறது ? அதற்காக எல்லோரையும் போல , நானும் ஏன் பயப்பட வேண்டும் ?
8 சமர்ப்பணம் ( சுயார்ப்பணம் )
சொற்ப நாட்களிலேயே , என் வாழ்வு , முடிந்து விடப் போகிறது , என்று தெரியாமலேயே , அற்ப சந்தோஷங்களில் , பெருமை கொண்டவனாக , இருந்தேன் ! இறுதியான இந்த நிலையில் , என் மேல் முறையீடு , எதுவும் பலன் தராது , என்று நான் அறிந்திருப்பதால் , சொந்தம் என்று சொல்வோர் , என்னைப் பார்க்க வரும்போது , எந்த உணர்வும் இன்றி , நான் முடிந்து போயிருப்பேன் ! இந்த உலகில் , தனக்குத் தானே , பெருமை பாராட்டிக் கொள்ளும் , நிலையில் , எந்த பொருளும் இல்லை , என்பதை ,
நன்றாகவே , நான் புரிந்து கொண்டேன் ; அதனால் , அனைத்து வகையிலும் , பெருமை கொள்வதற்கு , என்று உள்ள , ஒரே பொருள் , அனைத்து உயிர்களையும் காக்கின்ற , அந்த பரம்பொருளாகிய , நீதான் , என்று அறிந்து கொண்டேன் , ஐயனே ! எல்லாம் வல்ல , பரம்பொருளாகிய , உன் பார்வையில் , என்னைச் சமர்ப்பிக்கின்றேன் ! நீ மட்டும்தான் , என்றும் , என் பாவங்களைக் கழுவி , தூய்மை செய்யும் , நேயம் உள்ளவன் என்றும் , உணர்ந்து கொண்டேன் ! ஸ்வாமீ ! என்னை நீ , ஏற்றுக் கொள்ளும் தகுதி , எனக்கிருக்குமாயின் , ஏற்றுக் கொள்வாயாக , என்று கூறி , தன் தர்மங்களைத் , தாரை வார்க்கிறான் ; தர்மங்களோடு , அவனுடைய , அனைத்து செயல்களையும் , வேதனைகளையும் , தானே , ஏற்றுக் கொண்ட கண்ணன் , தன் விஸ்வரூப தரிசனம் , தந்தருளுகிறான் ;
அந்த தரிசனம் கண்டு , அவன் மெய்மறந்திருந்த , அந்த நிலையிலேயே , அவனைத் தன்னுடன் , இணைத்துக் கொள்கிறான் ; தன்னை , உணர்ந்து கொண்டால் , எவரையும் எதையும் , எந்த நிலையிலும் , ஏற்றுக் கொள்ளும் , கருணாமூர்த்தியல்லவா , அவன் ? எல்லாவற்றுக்கும் , சில விதிவிலக்குகள் உண்டு ; ஆனால் , விதிவிலக்குகள் எல்லாம் , பொதுவழக்காகாது , என்பதை , நாம் புரிந்து கொள்ள வேண்டும் ! பனியில் நனைந்த , மலர்களாக வந்தோம் ! காய்ந்திருந்தாலும் , பரவாயில்லை ! குத்தும் , முட்களாக இல்லாமல் , உலர்ந்த மலர்களாகவேனும் , திரும்பவும் நம்மை அவனிடம் , அர்ப்பணிப்போம் !
பூசுழலத் தான்வைத்த பெருமாளே போற்றி !
புவிமேலே வான்வைத்து பொலிந்தாயே போற்றி ! பொங்குகடல் தனைவைத்த திருமாலே போற்றி ! பொற்தட்டாய் நிலவுகதிர் வைத்தாயே போற்றி !
சமர்ப்பணம் நிறைவு பெறுகிறது !


