பக்திஇசைப்பாடல்கள்
1
விநாயகன்
----------------
வாரண மாமுக வாயனே வாக்கியனே -ஒரு
காரண மாயுல கெங்கு மிலங்கும் சாக்கியனே -வாரண
ஆகுவாஹனா அகிலவாமனா
அன்னைபார்வதி குணா
மாயவன் போற்றிடும் மோகனக்கண்ணா
மணிவண்ணா -------------------------------------------வாரண
வேதநாயகா வினைகள்மாயவா
வெண்ணிறத்தூயவா
மாதவர் போற்றிடும் மறைமுதலோனே
மலர்ப்பாதனே -------------------------------------------வாரண
சூரன்மூஷிகன் வேரறுத்தவா
சுப்ரமணியின் முன்னவா
பாரினரேற்றிடும் பண்புடையோனே
பரமன் மைந்தனே --------------------------------------வாரண
ஓமெனும்ஒலி தன்னில் உறைபவா
ஓதுவார்க்கருளவா
மாமறை தாங்கிடும் மணிவயிற்றோனே
மாதங்கனே ----------------------------- -----------------வாரண
2
ஒரகைவிநாயகன்
--------------------------
ஒரகைத் தெருநடுவில் உயர்ந்த அரசடியில்
அமர்ந்தாய் விநாயகனே
உருக்கும் எமதுவினை அறுக்கும் உனதடியில்
குவிந்தோம் நாயகனே --------------------------------ஒரகை
தேவர்கள் படுதுயரை தீர்த்த சிவன்துயரை
தீர்த்தவனும் நீயல்லவா
யாவரும் வணங்கிவர தீர்த்தக் கரையிலுறை
மூத்தவனும் நீயல்லவா
மூத்தவனும் நீயல்லவா ------------------------------ஒரகை
பாரதம் எழுதிடவும் வியாசனுக் குதவிடவும்
கொம்பினை நீஒடித்தாய்
தென்னகம் வாழ்ந்திடவும் காவிரி பாய்ந்திடவும்
கமண்டலம் நீகவிழ்த்தாய்
கமண்டலம் நீகவிழ்த்தாய் ---------------------------ஒரகை
கானக வள்ளிக்கு கல்யாணம் நடந்திடவே
யானையின் வடிவெடுத்தாய்
தேனினும் இனிதாக பாடல்கள் புனைந்திடவே
ஔவைக்கு அருள்கொடுத்தாய்
ஔவைக்கு அருள்கொடுத்தாய் -------------------ஒரகை
3
கலைமகள்
----------------
துதிப்போம் துதிப்போம் துதிப்போம்
கல்வியும் செல்வமும் வாய்த்திட
கலைமகளும் அருளிடவே
கருணை தாருமென்று
கனிவுடனும் பணிவுடனும்
காலமெல்லாம் துதி பாடுவோம் ---துதி
வீணையை கையிலே ஏந்திடுவாள்
வெள்ளைக் கலைதன்னை உடுத்திடுவாள்
தாமரை மலரினில் வீற்றிடுவாள்
தாயாக எப்போதும் விளங்கிடுவாள் --------கல்வி
ஓயுதல் செய்யாமல் உழைத்திடவே
உண்மைகள் என்றும்நாம் உரைத்திடவே
உறுதிகள் ஏற்போமே இந்நாளிலே
உயர்வோமே வாழ்வோமே எந்நாளுமே --கல்வி
4
முருகன்
------------
ஈசனின் மைந்தனே கந்தனே
இருநிலம் போற்றிடும் முருகனே
திருமகள் மருகனே தேவனே
கண்களில் பொறியனாய் கடுகி வந்தவா
கார்த்திகை மாதரால் நாளும் வளர்ந்தவா
காடுகாத்த வள்ளியின் காதலைப் பெற்றவா
கடலலை தழுவிடும் செந்திலாண்டவா -------ஈசனின்
பாதகன் சூரபதுமன் பகை முடித்தவா
பாவை வள்ளி தேவயானை மணமுடித்தவா
பாரினில் நாங்களும் மாண்புடன் வாழவே
பரிவுடன் ஆளுவாய் அருளைப் பேணுவாய் --ஈசனின்
குன்றுதோறும் ஆடிவந்து குடியிருந்தவா
இன்று எங்கள் இதயந்தன்னில் குடியிருக்கவா
நின்றிடும் தீங்குகள் இன்றுடன் நீங்கவே
நன்றெமைக் காத்திடு அருளைத்தந்திடு ------ ஈசனின்
5
முருகன்
------------
வருவான் வருவான் வருவான் --------------வேண்டும்
தருணத்தில் காத்திட
சரணமென வருபவரைக்
கருணைகொண்டேயிங்கே
வேலெடுத்து வினைதீர்த்து
காலமெல்லாம் கரைசேர்த்திட ---வருவான்
பொறியாக பொய்கையிலே வீழ்ந்தவனாம்
பரிவாக கார்த்திகையால் வளர்ந்தவனாம்
ஆறுமு கமென்னும் பேரினனாம்
அன்னையால் ஒருமுகமாய் ஆனவனாம் --வேண்டும்
தந்தைக்கு மந்திரமே உரைத்தவனாம்
தரணியிலே பெருமைபல சேர்த்தவனாம்
சிந்தையில் நினைப்போர்க்கு அருள்பவனாம்
சேவற்கொடியோடு வருபவனாம்-------------வேண்டும்
6
ஐயப்பன்
------------
தாள் வாழ்கவே -சுதன்
தாள் வாழ்கவே
ஹரிஹரன் புதல்வனின்
கரை சேர்க்கும் சாத்தனின் --------------தாள்
பம்பை நதிநீ ராடிவந்தோமே
பக்தி யாகவே
வாவரின் தயவால் மீண்டுவந்தோமே
பணிவே மேவியே
பேட்டைகள் துள்ளி பேரினைச் சொல்லி
ஆட்டம் ஆடினோம் -உன்
நாட்டம் நாடினோம் --------------ஹரிஹரன்
கதிகிட்டு மென்றே காடுகள் கடந்தோம்
கண்கள் வாடியே
பதினெட்டு படிகள் ஓடிக் கடந்தோம்
பாதம் தேடியே
பாவங்கள் தீர சோகங்கள் மாற
பாட்டைப் பாடினோம் -பட்ட
பாட்டைப் பாடினோம் ------------ஹரிஹரன்
7
உமை
---------
வேண்டினோம் தாயே உமையே
வினைதமைத் தீர்த்தே எமையே
யாண்டுமே அல்லல் அகல
அனைவரும் வாழ்வில் உயர
மீண்டுவந் தேற்றம்பெறவே
மேன்மைகள் எங்கும் உறவே
ஆண்டருள் செய்ய
அருளடிகள் என்றும் போற்றி போற்றி
தோடுடை செவியன் துணையே போற்றி
துணைதரு கற்பகத் தருவே போற்றி
தருவே போற்றி இருளகற்றிடவே
அருளினை அருள்வாயே
அருளினை அருள்வாயே
அணிந்தோம் அணிந்தோம்
கழலே-சிர -மணிந்தோம் -------தோடுடை
உலகம் தோன்ற முழுமுதலானாய்
உயிர்களும் இயங்க சக்தியுமானாய்
சக்தியுமானாய் சமத்துவம் விளங்க
சர்வமும் ஆனாயே -
சர்வமும் ஆனாயே
பணிந்தோம் -பணிந்தோம்
பதமே -தினம் -பணிந்தோம் ----தோடுடை
-------------
எங்கள் அம்பிகை பவனி வந்தாள்
எமைக் காக்கவே
என்றும் அருள்மழை அவனி தந்தாள்
குறை தீர்க்கவே
பொங்கும் இன்பம் எங்கும் கொழித்திடவே
பூமி இன்னலின்றி செழித்திடவே
பூங்காற்று நிலைத்திடவே --------------எங்கள்
சூலாயுதம் ஏந்தியே சூறாவளி யாகவே
சூழும் பகை ஓட்டிடுவாள்
துன்பக் கடலை நீந்திச் செல்லும் படகாகவே
சுற்றிவந்து மீட்டிடுவாள்
கயிலையிலே பம்பரமாய் சுழல்கின்றவள்
மயிலையிலே கற்பகமாய் அருள்கின்றவள்
கண்ணுக்கு இமையாக திகழ்கின்றவள்
கைகூப்பி நின்றாலே மகிழ்கின்றவள்
உற்றவர்க்கு உவந்திடுவாள்
ஓடோடி வந்திடுவாள் ------------------------எங்கள்
ஆதரிப் போமென்று அன்னை யாகச்சென்று
அன்புமழை பொழிந்திடுவாள்
அரணாக வேயென்றும் அகிலமெல் லாம்நின்று
அல்லல்களைக் களைந்திடுவாள்
தான்தோன்றி ஈசற்குத் துணையானவள்
தாள்போற்றும் பக்தர்க்குத் தாயானவள்
ஒரகைக்கு ஒளியாக ஒளிர்கின்றவள்
உதவிக்கு வழியாக வருகின்றவள்
ஈசனுடல் பாதியவள்
எங்களுயிர்த் தாதியவள்----------------------எங்கள்
9
அமிர்தவல்லி
-------------------
சங்கடம் போக்கிட
சிங்கத்தில்-வந்தாள்- வல்லி -அமிர்த-வல்லி
எங்கள்-மங்கலம்-காத்திட
குங்குமம் -தந்தாள் -அள்ளி -கையில் -அள்ளி
துயர்கள் தீர்க்கவும்
வளங்கள் சேர்க்கவும்
துணை -யா -கத்-தான் -----------------------சங்கடம்
வேம்பாக நின்றது
உமைதான் -அன்னை-உமைதான்
பாம்பாக வந்தது
உமைதான்-அன்னை-உமைதான்
நாமே-தொழு-வோமே
நாளும்-பணி-வோமே
நலம் யாவுமே
நன வாகுமே
மனம் போலவே
தினம் சேருமே --------------------------------சங்கடம்
மீனாட்சி யானவள்
அன்னை-உமை-அன்னை
காமாட்சி யானவள்
அன்னை-உமை-அன்னை
ஆனாள்-துணை-ஆனாள்
ஆள்வாள்-நமை-ஆள்வாள்
கண் காத்திடும்
இமை யானவள்
மணம் சேர்த்திடும்
மலர் ஆனவள் --------------------------------சங்கடம்
10
பெருமாள்
---------------
ஒரகை வருகை தந்த
பெருமாளே சிரம் பணிந்தோம்
கரம் அசைத்துடன் வரம் அளித்தெமை
பரிவாகக் காத்தருள் செய்வாய் -கண்ணசைவில்
பரிவாகக் காத்தருள் செய்வாய்
யானைக் கருள் புரிந்த
மாயக் கமலக் கண்ணா
மிதித்து வினைதமை கதித்து எம்முயிர்
மரியாமல் காத்தருள் செய்வாய் -கண்ணசைவில்
மரியாமல் காத்தருள் செய்வாய் -------------ஒரகை
பாஞ்சாலிக் கபயம் தந்த
பாசம் நிறைந்த கண்ணா
பணிந்து உந்தனை வணங்கியஎம்தமை
பரிவாகக் காத்தருள் செய்வாய் -கண்ணசைவில்
பரிவாகக் காத்தருள் செய்வாய்--------------ஒரகை
11
சிவபெருமான்
--------------------
மன்மதனை எரித்ததென்ன சிவபெருமானே
மையலினை தவிர்த்திடவோ சிவபெருமானே
முப்புரத்தை எரித்ததென்ன சிவபெருமானே
மூவுலகும் காத்திடவோ சிவபெருமானே---------- -மன்மதனை
சடைமுடியை நீவளர்த்தாய் சிவபெருமானே
கொடியதவம் செய்திடவோ சிவபெருமானே
இடையிலே தோலுடுத்தாய் சிவபெருமானே
உடையிலே என்ன என்றோ சிவபெருமானே
பிச்சையென ஓடெடுத்தாய் சிவபெருமானே
இச்செகத்தைக் காத்திடவோ சிவபெருமானே
உச்சியிலே நிலவணிந்தாய் சிவபெருமானே
நச்சுவெயில் தணித்திடவோ சிவபெருமானே-------மன்மதனை
உடுக்கையை நீஅடித்தாய் சிவபெருமானே
உறக்கத்தைத் தடுத்திடவோ சிவபெருமானே
இடுகாட்டில் இடம்பிடித்தாய் சிவபெருமானே
இருக்கவொரு இடமில்லையோ சிவபெருமானே
உணவென்று விஷத்தை உண்டாய் சிவபெருமானே
உணர்வின்றிப் போனதாலா சிவபெருமானே
ருத்ராட்சம் அணிந்துகொண்டாய் சிவபெருமானே
க்ஷேத்திரங்கள் பார்த்திடவோ சிவபெருமானே -------மன்மதனை
கழுத்திலே பாம்பெதற்கு சிவபெருமானே
கரத்திலே தீயெதற்கு சிவபெருமானே
நெற்றிக்கண் தேவையென்ன சிவபெருமானே
நீறணியக் காரணமென்ன சிவபெருமானே
மங்கையிவள் இங்கிருக்க சிவபெருமானே
கங்கையவள் உனக்கெதற்கு சிவபெருமானே
சங்கரியை ஆடவைத்தாய் சிவபெருமானே
எங்களையும் ஆடவைப்பாய் சிவபெருமானே-------மன்மதனை
12
சிவபெருமான்
--------------------
அன்புக்கு அதிதியவன் அனாதியவன்
அமைதி தருவான்
அது தேடும் அடியவர்
நாளும் வளம் பெற அருள்வான்
வெண்ணீறு தருவான்
வினை யாவும் பொடிபட
வாழ்வு நலம் பெற அருள்வான்
கங்கையைத் தலைமேல் சூடியவன் -குல
மங்கையின் வலமாய்க் கூடியவன்
புலித் தோலை இடையணிந்து
புலியாய் புவிகாக்கத் துடிப்பான்
அவன்- துடிப்பான்
கொடும்-பேய்கள் பிடரிபட
ஓட உடுக்கையினை அடிப்பான்
அவன்- அடிப்பான் -இந்த
பூமி செழிக்க களிக்க
பொய்மைகள் எல்லாம் முடிப்பான் -ஒரு
புது உலகிங்கே படைப்பான் ---------வெண்ணீறு
தில்லையில் நடனம் ஆடியவன் -வட
எல்லையில் வீடு தேடியவன்
உலகெங்கும் நிறைந்திருந்து
உயிர்களை என்றும் காப்பான்
அவன்- காப்பான்
தினம் ஏங்கும் எளியவரின்
இன்னலை அன்றே தீர்ப்பான்
அவன்-தீர்ப்பான் -ஒரு
தீங்கு நம்மை அணுகி விடாமல்
துணையாய் அவைகளைச் சாய்ப்பான் -வரும்
துயர்கள் யாவையும் மாய்ப்பான் - வெண்ணீறு

































































