இட்டார்க்குஇட்டபடி
-----------------------------
விதை ஒன்று போட செடி ஒன்று முளைப்பதில்லை;
வினை விதைத்தவன் திணை அறுப்பதில்லை ;
நமக்கு என்ன கிடைத்ததோ , அது நாம் கேட்டது;
ஆம்; அது பிறருக்கு நாம் செய்தது ; எதை நாம் செய்கி
றோமோ அதுதானே நமக்கும் வேண்டும், என்று பொருள் ?
வேண்டும் என்றால் கேட்கத்தானே செய்வோம் ? என்றால்
நாம் கேட்டது தானே? நமக்குக் கிடைத்திருக்கிறது!
நான் ஒரு ரூபாய் கொடுத்தால், அந்த ஒரு ரூபாய் தான்
எனக்குத் திரும்பக் கிடைக்கும் !
நூறு ரூபாய் கொடுத்திருந்தால் நூறு ரூபாய் வந்தி
ருக்கும்! இதைத்தான் , இன்னார்க்கு இன்னபடி என்கிறோம்!
இன்னார் ஒரு ரூபாய் கொடுத்தார் !
இன்னார் நூறு ரூபாய் கொடுத்தார் ;
ஒரு ரூபாய் கொடுத்தவருக்கு ஒரு ரூபாய் ;
நூறு ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய்!
வேட்டைக்குப் போன தசரதன் , தூரத்திலிருந்து பார்த்து
விலங்கு ஒன்று நீர் அருந்துகிறது என்று எண்ணி அம்பு
எய்தான். அந்த அம்பு வயதான பார்வையற்ற ,தன் ,
பெற்றோருக்கு ,நீர் மொண்டுகொண்டிருந்த ,சிரவணன்
என்ற சிறுவன்மேல் பாய்ந்தது! பதறிப் போன தசரதன்
அவனை அவனுடைய பெற்றோரிடம் தூக்கிச் சென்றான் !
புத்திர சோகத்தால் துடித்த அவர்கள், தசரதனும் தன் கடைசி
நாட்களில் புத்திர சோகத்தால் துடிக்கவேண்டும் என்று
சாபமிட்டார்கள் . அந்தச்சாபத்தின் விளைவாகவே பின்னாட்
களில் முடிசூடச் சென்ற ராமனைக் காட்டுக்கு அனுப்பி
பிரிய நேர்ந்து ,புத்திர சோகத்தால் துடித்து அவன் இறக்க
நேர்ந்தது.
ராமாயணத்தில்,ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான் !
மகாபாரதத்தில் கிருஷ்ணனாக வந்த ராமன் வேடனாக வந்த
வாலியால் மறைந்திருந்து கொல்லப்பட்டான் !
விஷம் தோய்ந்த அப்பத்தைக் கொடுத்து ,பட்டினத்தாரை,அவ
ருடைய சகோதரியே கொல்ல முயன்றாள் ! அந்த அப்பத்தை
வீட்டின் மேல் எறிய வீடு எரிந்து சாம்பலானது !
தன்வினை தன்னைச்சுடும் ;ஓட்டப்பம் வீட்டைச் சுடும் ;
என்றார்! பட்டினத்தார்!
நான் என் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ள முடிய
வில்லை, எனும்போது என் சாவுக்கு மட்டும் என்மகன் வருவான்
என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும் ? என் தந்தைக்கு ஒரு
நீதி!எனக்கு ஒரு நீதியா?அது என்ன நீதி? இதில் யாரையும்
நோவதில் என்ன நியாயம் ?
என்ன நடக்கிறதோ அது முன்பே தீர்மானிக்கப் பட்ட ஒன்று!
அதை மாற்றுவதற்கு நமக்கு அதிகாரமில்லை!
அதிகாரமெல்லாம் அவன் கையில்! நம் கையில் ஒன்றுமில்லை!
எண்ணாதஎண்ணமெல்லாம்............
( முதுமையில் வரும் உளறல்கள்; இது எல்லோருக்கும் தான் )
குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்!
யானை மேல் ஏறி சவாரி செய்தவன் , முதுமை வந்தபிறகு
நடக்க முடியாமல் நடந்து ஊர்போய்ச் சேர்வானோ ?
இல்லை பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொள்வானோ?
காலம் மலையை மடுவாக்கும் !
மடுவை மலையாக்கும் !
யாரும் தங்கள் நிலையை மறக்காதவரை எல்லாம் சரியா
கத்தான் இருக்கும் !
மறக்கின்ற போதுதான் தொல்லைகள் தொடங்கும் !
மணம் முடித்துவைத்தாலும் மாறமாட்டேன் என்பவர்களும்
மாறிவிடுவார்கள்! மாறிவிடுவோமோ என்று பயப்படு கின்றவர்கள் ஒருவேளை மாறாமற் போனாலும் போய் விடுவார்கள்!
காணாததைக் கண்டவர்கள்! கண்டும் காணாதவர்கள்!
ஜம்பம் புடவை கட்டிக் கொள்ளும்!
இருட்டைப் போக்க,விளக்கு ஏற்றும் மருமகளும் வருவாள்!
எரியும் விளக்கை அணைக்கும் மருமகளும் வருவாள் !
பழையதைத் தூக்கிப் போடுகிறேன் என்று பழையவர்களையும்
தூக்கி எறிந்து விடுவார்கள்!
ஒருசமயம் பேரன் பிறந்து கவிதை வடிக்க வைப்பான் !
மற்றொருசமயம் பேத்தி பிறந்து கண்ணீர் வடிக்க வைப்பாள் !
புலி பூனையாகி விடும் !
எலி பாம்பாகி விடும் !
ராஜா சேவகனாகி விடுவான் !
சேவகன் ராஜாவாகி விடுவான்!
ஜால்ரா சதங்கை கட்டிக் கொள்ளும் !
சதங்கை குப்பையில் ஒட்டிக் கொள்ளும்!
உறவு பகையாகும் ; பகை உறவாகும்!
சொந்தம் அந்நியமாகிப் போகும்!
சிங்கம் அசிங்கமாகி விடும் !
அப்படித்தான்
அரியணையில் அமர்ந்திருக்கும் நம்மை மனையில்
உட்கார்த்தி,மூக்கறுத்து விடுவார்கள் !
பிச்சை போட்ட நம்மை பிச்சைக்காரனாக்கி விடுவார்கள் !.
என் நிலையை நான் எண்ணிப் பார்க்கின்ற போது ,
"கலையைப் படிச்சவன் காத்தாப் பறக்குறான் ,
காக்கா புடிக்கிறவன் காரில் பறக்குறான் ,
குலமகள் ராதை கூழைக் குடிக்கிறா ,
கூறுகெட்டுப் போனவ கும்மாளம் போடுறா" , என்ற
பழைய திரைப் படப்பாடல் ஒன்றுதான் ,நினைவுக்கு
வருகிறது!
காலம் மாறும் என்று புரிந்துகொண்டால் நடத்தை மாறாது!
இருப்பதும் போகாது!
அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் அதன் பலனை
அறுவடை செய்து பரிதவிக்கிறார்கள் !
ஊழையும் உப்பக்கம் காண்பர் என்ற அதே வள்ளுவர் தான்
ஊழிற் பெருவலி யாவுள என்றும் சொல்கிறார்!
ஆக வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்தான்!
பிறவி என்ற இந்த பயணத்தில் , நம்மோடு பயணித்த நமது
பெற்றோர் ,மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் என
எல்லோரும் ஒருநாள் நம்மைப் பிரிகின்றவர்கள் தான்!
அவர்கள் முன்னாலேயே நம்மைப் பிரிந்துவிடுவதால் ,
என்ன இழப்பு ஏற்பட்டு விடப் போகிறது?
என்ன கொண்டுவந்தோம் ?அதைக் கொண்டுபோவதற்கு !
யாரோடு வந்தோம் ?அவரோடு போவதற்கு! .என்ற கீதை
வரிகளை எண்ணி ஆறுதல் கொள்ள வேண்டியது தான்!