Pages

Tuesday, August 21, 2012

66 mudivum thodakkamum

முடிவும்,தொடக்கமும்.
-------------------------------------

"முடிவில்லாததுஎதுவோஅதுவேமுதலுமானது"

தலைப்பு பொருத்தமற்றதாகத் தோன்றுகிறதோ! தொடக்கம் தானே முதலில் இருக்கவேண்டும்! அதனால் தொடக்கமும் முடிவும் என்றல்லவா இருக்கவேண்டும், என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? எங்கே தொடங்கியது என்று தெரியாமல், இங்கேதான் என்று, தொடக்கத்தை, எங்கே தொடங்க முடியும்? கோழிதான் முட்டை இடமுடியும்; அதனால் கோழிதான் முதலில், என்கிறார்கள், ஒரு சாரார்! முட்டையிலிருந்து தானே கோழி வரமுடியும்; ஆகவே முட்டை தான் முதலில், என்கிறார்கள், இன்னொரு சாரார். முதலில் தோன்றியது, முட்டையா? கோழியா? என்ற கேள்விக்கு இன்னும் விடை காண இல்லை!

இறைவன், மனிதனைப் படைத்தான்; மனிதன் இறைவனைப் படைத்தான் என்பார்கள்! மனிதனைப் படைத்தது இறைவன் என்பதால், இறைவனே தொடக்கம் என்பது சரி! அந்த இறைவனையே படைத்தது மனிதன் என்பதால் மனிதனே தொடக்கம் என்பதும் சரி! இரண்டும் சரிதான் என்கின்ற போது, யார் யாரை முதலில் படைத்தது என்ற கேள்வி எழுகிறது! எது தொடக்கம் என்ற கேள்விக்கு இப்போதும் விடை இல்லை!



இவ்வுலகம் படைக்கப் பட்டபோது, பூமியினுள், உயிரினங்களுக்கான விதைகள் இருந்திருக்க வேண்டும்! (அந்த விதைகள் எப்படி வந்தன? அவை தாவரங்களிலிருந்து தானே வந்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்) ஏதோ ஒரு அடிப்படையில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றி இருக்க வேண்டும்! எதற்கும் ஒரு பேஸ் (base) வேண்டும் என்பது அடிப்படை உண்மை!

எந்த அடிப்படையில் பார்த்தாலும், விதைகளின் முடிவில், உயிரினங்கள் தொடங்கின என்று தெரிகிறது! ஒன்றின் முடிவு மற்றொன்றின் தொடக்கம் என்று வைத்துக் கொள்ளலாம்! ஆகவே, முடிவும், தொடக்கமும் என்பது சரியே!

முடிவு இல்லாமல் தொடக்கமில்லை! தொடக்கமில்லாமல், முடிவு இல்லை!
எண்ணிப் பார்த்தால், உண்மை புரியும்!

இருள் முடிந்தால் வெளிச்சம் தொடங்கும்!
இரவு முடிந்தால் பகல் தொடங்கும்!
நிலவு தொடக்கமென்றால், கதிரவன் முடிவு!
நிலம் தொடங்கினால், கடலில் முடியும்!
நாடு தொடங்கினால், காட்டில் முடியும்!

குலை தள்ளிய வாழை வெட்டுப் படும்போது, கன்று விடப்படும்! அது தொடக்கம்!
விளைந்த கரும்பை வெட்டினால், அரும்புகள் துளிர்க்கும்! அது தொடக்கம்!
திரண்ட மேகங்களே, தண்ணீரை வெளியேற்றும்! அதுவும் தொடக்கம் தான்!
மண்ணை அகழ்ந்தால், பள்ளம் தோன்றும்! இதுவும் தொடக்கம் தான்!

விதைப் பருவம் முடிகிறது! செடிப் பருவம் தொடங்குகிறது!
செடிப் பருவம் முடிகிறது! மரம் தொடங்குகிறது!
பூ தொடங்கி, பிஞ்சில் முடிந்து;
காய் தொடங்கிக், கனியில் முடிந்து;
விதை தொடங்கிச் செடியில் முடிந்து, இவ்வாறு ஒன்றின் முடிவு, மற்றொன்றின் தொடக்கமாகிறது!

பிள்ளைப் பருவம் முடிந்து, பள்ளிப் பருவம் தொடங்குகிறது!
பள்ளிப் பருவம் முடிந்து, பயிற்சிப் பருவம் தொடங்குகிறது!
பயிற்சிப் பருவம் முடிந்து, பணிப் பருவம் தொடங்குகிறது!
பணிப் பருவம் முடிந்து, ஓய்வுப் பருவம் தொடங்குகிறது!

பழைய கற்காலம் முடிந்து, புதிய கற்காலம் தொடக்கம்!
புதிய கற்காலம் முடிந்து, உலோக காலம் தொடக்கம்!
இதிகாச காலம்! சரித்திர காலம்! மன்னர் காலம்! ஆங்கிலேயர் காலம்! நமது காலம்! இப்படி ஒவ்வொரு கால முடிவும் மற்றொரு காலத்தின் தொடக்கமாக இருந்திருக்கிறது!

சாலையில் பயணிக்கிறோம்! ஊர் எல்லைகள் காட்டும் கற்களைக் காண்கிறோம்!
ஓர் ஊர் முடிகிறது! மற்றோர் ஊர் தொடங்குகிறது!
ஒரு மாவட்ட எல்லை முடிகிறது! அடுத்த மாவட்ட எல்லை தொடங்குகிறது!
ஒரு மாநிலம் முடிந்தால், வேறு மாநிலம் தொடங்குகிறது!
ஒரு நாடு முடிந்தால், மற்றொரு நாடு!

மழலைப் பருவம் முடிந்து, பிள்ளைப் பருவம் தொடங்கி;
பிள்ளைப் பருவம் முடிந்து, வாலிபப் பருவம் தொடங்கி;

வாலிபப் பருவம் முடிந்து மணப் பருவம் தொடங்கி;
மணப் பருவம் முடிந்து, பேராண் பருவம் தொடங்கி;
பேராண் பருவம் முடிந்து, கிழப் பருவம் தொடங்கி;
கிழப் பருவம் முடிந்து, ....
இறப்புக்குப் பிறகும் பிறப்பு இருப்பதாக நமது மதநூல்கள் கூறுகின்றன!
என்று பிறந்தோமோ! அன்றே இறப்புக்கான அனுமதியும், கிடைத்து விடுகிறது!
அதாவது தொடக்கமே, முடிவின் தொடக்கம்!
எனவே, பிறப்பு, இறப்பின் தொடக்கம்! இறப்பு பிறப்பின் தொடக்கம்!

உதிர்கின்ற பழுத்த இலையைப் பார்த்து உதிராத பச்சை இலை, சிரிக்குமாம்;
உதிர்கின்ற இலை சொல்லுமாம்,
"இன்று நான்; நாளை நீ", என்று.
உதிர்கின்ற பழுத்த இலையைப் பார்த்து உதிராத பக்குவப்பட்ட பச்சை இலை, சொல்லுமாம்;
"இன்று நீ! நாளை நான்" என்று.
நேற்று தொடக்கம்; இன்று முடிவு; நாளை இன்றாகும்; இன்று நேற்றாகும்!

Misfortune never comes singly- துன்பம் தனித்து வருவதில்லை! இன்பமும் அதுபோலத்தான்! இன்பத்துக்குப் பிறகு துன்பம் இருக்கிறது! துன்பத்துக்குப் பிறகு இன்பம் இருக்கிறது! ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு திறக்கும் என்பதும் இதைத்தான்! ஆகவே எல்லாம் முடிந்தது, என்று சோம்பி விடக் கூடாது! அடுத்த ஒன்று தொடங்கப் போகிறது என்று முயல வேண்டும்! முயற்சி இல்லாருக்குத் தொடங்கும் அடுத்த ஒன்றும் துன்பமே!

"கொடுமையாக இருக்கிறதே, என்று அடுத்த ஊருக்குப் போனானாம்; அங்கேயும் ஒரு கொடுமை இவனை வாவென்றதாம்"; முடிவே தொடக்கம் என்பதற்கு இதை விட, நல்ல உவமை கிடைக்காது!

நிலையாமையைச் சொல்லவே இவ்வளவு சொற்களும்! எதுவும் நிலைக்காத இவ்வுலக வாழ்வில், நிலையாமை ஒன்றே நிலையானது! இருக்கின்ற வரையில் நல்லது செய்தால், கிடைக்கும் நற்பெயர் நம்மை நிலைக்கச் செய்யும்!
பாலைவனமும் சோலைவனமாகும்!

நல்லதுஎன்றால்,அதுதொடக்கமாகஇருந்தால்என்ன?முடிவாகஇருந்தால்என்ன?தொடக்கம்முடிவாகட்டும்! முடிவுதொடக்கமாகட்டும்! அனைத்தும்நலமாகட்டும்!