Pages

Wednesday, March 21, 2012

19 PeN

                                                                             
                                                                             
                         மண்ணைப்பெண்ணாக்கினோம்!-அன்று
பெண்ணைமண்ணாக்கினோம்!--இன்று                                                                      


         
இடம்: ராமேஸ்வரம் ( இந்தியா )
                             
                                                                        பெண்
                                   
இட்டபணி செய்வதற்கும் இச்சைக்கு இணங்குதற்கும்,
மட்டிலுமே பெண் நமக்கு ! மற்றெதற்கும் அவளெதற்கு ?
என்றே ஏசிடுவீர் ! ஏகடியம் பேசிடுவீ ர் !
நல்லவர்போல் நடித்திடுவீ ர் ! நாளும் குடித்திடுவீ ர் !
நடுத்தெருவில் தானவளை நாயெனவே அடித்திடுவீ ர் !
கொஞ்சம் நில்லுங்கள் ! கூறுகிறேன் கேளுங்கள் !
நெஞ்சம் தொட்டுவரும் நியாயத்தைப் பாருங்கள் !

முன்னே தவமிருந்து முன்னூறு நாள் சுமந்து ,
நம்மை ஈன்றவளும் பெண்ணே ! உடன்பிறந்து ,
அண்ணா என மகிழ்ந்து ,தம்பி எனக் கசிந்து ,
நம்மை அழைப்பவளும் பெண்ணே ! பொட்டணிந்து ,
அத்தான் எனக்குழைந்து அத்தனையும் நமக்குத் தந்து ,
கொத்தாய் அணைப்பவளும் பெண்ணே ! பாசமிகும் ,
மகளே எனப்பிறந்து , மழலை அமுது தந்து ,
மங்கை எனவளர்ந்து ,மணமுடித்தும் பெற்றநமை ,
மனமகிழச் செய்பவளும் பெண்ணே ! அன்பு செய்தால் ,
மலராய் மணம் தருவாள் ! மதிகெட்டு வம்பு செய்தால் ,
புயலாய்ச் சீறிடுவாள் ; புன்மைதனைக் கீறிடுவாள் !

வீட்டிற் கிடக்கும் பெண்தான் ,
விமானத்தை ஓட்டுகிறாள் ;
அடுப்பை ஊதும் பெண்தான் ,
அகிலத்தை ஆளுகிறாள் ;
அவியல் ,பொரியல் செய்து கிடந்தவள் ,
அறிவியல் பொறியியல் அனைத்து இயல்களும் ,
கற்றுத் தேர்கிறாள் ; வெற்றித் திருமகளாய் ,
பாரதியின் பாடலுக்கு வீர உரை தீட்டுகிறாள் !

பெண்ணை எண்ணிப் பாசத்தால் உருகுகிறேன் !
அவள்--தாயாய் அமைந்தெனக்கு தியாகம் பல புரிந்ததனால் ;
பெண்ணை எண்ணிக் கனிவால் குலுங்குகிறேன் !
அவள் -தமக்கையாய் உடன்பிறந்து தேவைகளைச் செய்ததனால் ;
பெண்ணை எண்ணிப் பூரிப்பால் மயங்குகிறேன் !
அவள் --தங்கையாய்ப் பிறந்தென்னை அண்ணா என்றழைத்ததனால் ;பெண்ணை எண்ணிப் பெருமையினால் நிமிர்கின்றேன் !
அவள் -மகளாகப் பிறந்தெனக்கு மனநிறைவைத் தந்ததனால் ;
பெண்ணை எண்ணிக் கண்ணீரால் கலங்குகிறேன் !
அவள் -தாரமாய் வந்தெனக்குத் தன்னையே தந்ததனால் ;

அன்னையாய் , உடன்பிறப்பாய் , அண்ணியாய் ,
மனைவியாய் ,மகளாய் , மருமகளாய் மாறி ,
அத்தனை இன்னலும் மொத்தமாய் ஏற்றிடும் ,
அன்பின் திருவுருவாம் பெண்ணை ,
அடிமை செயும் வாடிக்கை , இன்னும் தொடர்வது தான் வேடிக்கை !
கண்ணை மூடிவைத்தால் யாரும் ,
காட்சிகள் காண்பாரோ பாரில் ?



                                                                                                

No comments:

Post a Comment