Pages

Monday, March 26, 2012

30 VaazhththukinREn!

வாழ்த்துகின்றேன்!!



வயற்காட்டில் விளைபொருளை வாரிப் போந்து,
வாழ்கின்ற வீட்டினிலே கொண்டு சேர்த்து,
வருபசியும்,உறுபிணியும் போகற் கென்று,
வளர்கன்னல் மஞ்சளுடன் வண்ணம் தீட்டி,
வயனன்னெல் தேர்ந்தபுதுப் பானை இட்டு,
வண்ணவுடை யணிநகையில் குலவை கொட்டி,
வளைமாதர் கைசிவக்க வண்ணம் ஆக்கி,
வாழையிலை பெய்ததனை வணங்கி யுண்டு,
வாழ்கென்றும் மகிழ்வென்றும் பொங்கவென்றும்,
வளங்கள்பல பொங்கட்டும் வாழ்வில் என்றும்,
வாழ்வில்நலம் பெற்றுலகில் ஒங்க வென்றும்,
வருபொங்கல் நன்நாளில் வாழ்த்து கின்றேன்!


பழம் பொருளை எரித்திடுதல் போகியாகும்!
பாதகங்கள் தவிர்த்திடுவோம் வாழ்வில் நாமும்!
பானையிலே நெய்மணக்கப் பொங்கும் பொங்கல்!
பரிந்துணர்வைக் காப்பதற்கு மக்கள் பொங்கல்!
உழைப்புக்கு ஏற்றம்தர மாட்டுப் பொங்கல்!
உறவோர்க்கு மகிழ்ச்சிதரக் காணும்பொங்கல்!
உற்றோரும் மற்றோரும் கூடி நின்று,
ஒற்றுமையாய் இருத்தற்குஉறுதி பூண்டு,
உயிரினங்கள் ஒன்றென்று மதித்து வாழ்ந்து,
வேற்றுமைகள் நீங்கவென வேள்வி செய்வோம்!
வெல்லுவது மனிதமென முழக்கம் செய்வோம்!
உலகனைத்தும் உயர்கவென வாழ்த்து கின்றேன்!


உயிர்க்கெல்லாம் உணவளிக்கும் உழவர் வாழ்வு,
உவகையிலே பொங்கவென வாழ்த்து கின்றேன்!
உடனிருந்து உழைத்துவரும் கால்ந டைகள்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பெற வாழ்த்து கின்றேன்!
உலகத்தை உயர்த்தற்கு ஓய்தல் செய்யா,
உழைப்பாளர் வாழ்கவென வாழ்த்து கின்றேன்!
அடுபகையை ஓட்டற்கு அழிந்தி டாத,
படைவீரர் வாழ்கவென வாழ்த்து கின்றேன்!
பண்புடைமை கொண்டுபணி செய்தற் கென்றே,
பரிந்துவரும் பான்மையரை வாழ்த்து கின்றேன்!
பாங்குடையோர் அனைவரையும் ஊக்கு விக்கும்,
பாருள்ளோர் அனைவரையும் வாழ்த்து கின்றேன்!
    
      
                       

No comments:

Post a Comment