மணமக்களே! நீவிர்,வாழ்க!!
இருவர் என இருந்த நிலை மாறி,நீவிர்,
ஒருவரெனச் சிறந்திடவே மணம் காண்கின்றீர்!
அருமைஎனப் பலர்புகழ ஆற்றின் வாழ்க்கை,
அதுதானே வள்ளுவனும் கண்ட வாழ்க்கை!
அருமாண்பைப் பெற்றோராய் அகிலம் காண,
அன்புமணம் பரப்புவதில் அகிலும் நாண,
அவனியிடை வாழ்ந்திடுவீர் ஆன்றோர் போற்ற,
ஆற்றிடுவீர், அருந்தொண்டாம் இல்வாழ்வன்பால்!
தனியொருகை கொட்டலிலே ஓசை இல்லை!
தனியொருகால் தானாக ஓடல் இல்லை!
தனி மரமோ தோப்பென்று ஆதல் இல்லை!
தனிநிலவால் பூமிஇருள் போதல் இல்லை!
தனியொன்றாய் இதுவரையில் நின்றீர் நீவிர்!
தனிமையிலே இனிமைதனைக் கண்டீர் அல்லீர்!
இனியொன்றாய் இணைந்திடுவீர் ஏற்றம் உறுவீர்!
இன்பினிலும் துன்பினிலும் இனிமை பெறுவீர்!
காதலினை உயர்வென்றார் தமிழர் நாளும்;
கடிமணமே முடித்தவரும் களித்தார் நாளும்;
ஈதலிசை பட வாழ்தல் இனிதென் றாரே!
இருமனத்து உறவினையே மணம் என்றாரே!
கொண்டவனைப் பேணுதகைப் பெண்ணுக்காகும்!
கொண்டவளைப் போற்றுவதோ ஆணுக் காகும்!
இன்பெனினும் துன்பெனினும் இணைந்து செல்லல்,
இல்வாழ்வோர் ஏற்குதகைக் கடமை யாகும்!
இல்வாழ்வு பூஞ்சோலை அல்ல வென்பார்!
எவ்வாழ்வு நல்வாழ்வு என்னார்; பின்னர்,
இல்வாழ்வு அல்வாழ்வு என்ன வாழ்வு?
இணையில்லா வாழ்வின்பம் இல்லை என்பார்!
எவ்வாழ்வில் கல்லில்லை;முள்ளும் இல்லை?
இவையெல்லாம் இல்லாமல் உலகம் இல்லை;
இவ்வாழ்வில் இவையெல்லாம் கடந்து மீண்டு,
இனிமைபெறல் இறைவனுடை எண்ணம் ஆகும்!
ஆலைஎனில் வேலையிலா ஆலை யுண்டோ?
ஆழிஎனில் அலையில்லா ஆழி யுண்டோ?
மாலையிலே காலாற நடந்து செல்லல்,
பாதையிலே கல்கண்டு பயந்தால் ஆமோ?
தேனுண்ணக் கூட்டுள்ளே கையை விட்டோன்,
தேனீக்கள் கொட்டற்கு அஞ்சல் ஆமோ?
தேனென்றே வாழ்வென்றும் இனிதா கட்டும்!
தொடங்கிடுவீர்!புதுவாழ்வு!வாழ்த்து கின்றேன்!

No comments:
Post a Comment