Pages

Sunday, March 18, 2012

10 Samaththuvam
























           சமத்துவம்

                  1

  ஏசு வந்தார்


இருள்வானில் ஒளிநிலவு முகிழ்த்தல் போலும் ,
எல்லையிலாக் கடல் நடுவே கலங்கள் போலும் ,
மருளாடும் மனம் ஒளியைக் காணல் போலும் ,
மதிமூடன் மகிமையினால் மதியாம் போலும் ,
பொருளில்லா ஏழையுறு புதையல் போலும் ,
பொய்யான கதையொன்று மெய்த்தல் போலும் ,
அருளில்லா தலைந்திருந்த அவனி யாவும்,
அன்பூட்ட பண்பாளர் ஏசு வந்தார் !

2


உலகமகா உத்தமரில் உன்ன தத்தின் ,
திலகமெனத் திகழ்ந்தவர்நம் ஏசு ராஜன் ;
நிலைகடந்து உழன்றிருந்த உலக மாந்தர் ,
அலைகடலுள் துரும்பெனவே அலைந்த காலை ,
அளவில்லாப் பெருஞ்செல்வம் ஆங்கி ருக்க.
அவையெல்லாம் துச்சமெனக் கருதி மண்ணில் ,
இளகியதோர் மனம்கொண்டே பாவி யர்க்கு ,
இவ்வளவாய் அருள்கூர்ந்தே ஏசு வந்தார் !
மறைமகனார் நபிகள் நாயகம்
                                1
உலகமெலாம் இறைவன் செயும் ஆட்சி என்றும் ,
உவந்தெவர்க்கும் உணவளிப்பான் அவனே என்றும் ,
நிலமிருக்கும் ஏழையரை நினைப்பாய் என்றும் ,
நிந்தனைகள் செய்யாது வாழ்வாய் என்றும் ,
நலமளிக்கும் வழிகள்பல காட்டி மண்ணில் ,
வாழ்ந்தபல ஞானியருள் அரபுநாட்டில் ,
நிலவுஎனப் புறப்பட்ட தூதர் ;தூயர் !
ஒளிபரப்பும் குர் ஆனின் நபிகள் ஆவார் !
                                2
வாழ்ந்தாரும் வீழ்ந்தாரும் வாழல் வேண்டும் !
வருவாயில் ஒருபங்கு வழங்கல் வேண்டும் !
பிறமதத்தார் அனைவரையும் போற்றல் வேண்டும் !
பொல்லாங்கு பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும் !
உடன்பிறப்பாய் யாவரையும் எண்ணல் வேண்டும் !
உற்றாரும் மற்றாரும் ஒன்றே என்றே,
உற்றபல உண்மைகளை உரைக்க என்றே
உதித்தஅரு மறைமகனார் நபிகள் ஆவார் !

இறையடியார்கள்
                                1
தூஇறைவன் படைப்பினிலே பேதம் இல்லை ,
தீண்டாமை தீதென்றார் ஆதி சங்கர் !
உலகெல்லாம் ஒன்றிங்கு; உலகோர் எல்லாம் ,
உடன்பிறந்தார் தானென்றார் விவேகா னந்தர் !
சன்மார்க்கம் ஓங்கிடவே வழிவே றில்லை:
சமரசமே அதுவென்றார் வள்ள லாரும் !
அன்புவழிச் செல்வதுதான் இறைவனை நாம் ,
அடையும் நெறி என்றாரே வாரி யாரும் !
பக்திநெறி நின்றாலும் பரிவில்லா ரேல்,
முக்தியுறல் அறிதென்றார் மூவருந் தான் !
கடவுளடி காணற்கு கடமை செய்தால் ,
நெடியவழி வேறெதற்கு என்றான் கண்ணன் !
நன்றுநினைத் தொன்றுயிறை என்றி ருந்தால் ,
நம்உயிர்கள் இறைவனுரு என்றே தோன்றும் !
அன்புசிவம் என்பவர்க்கு அறிவு எல்லை !
அரியதவம் புரிவதற்குத் தேவை இல்லை !
                                                                                 

உயரலாம்

                                       1    
பரமசிவன் பரமபிதா அல்லா என்று ,
பலபெயர்கள் இருந்தாலும் இறைவன் ஒன்றே !
கண்மணியே நன்முத்தே கரும்பே என்று ,
எண்பெயரில் அழைத்தாலும் குழந்தை ஒன்றே !
விவிலியநூல் திருக்குர் ஆன் கீதை என்று ,
வேதங்கள் பல எனினும் உண்மை ஒன்றே !
அறங்கள் பல பேசுகிற மதங்கள் வேறாய் ,
இருந்தாலும் அடிப்படையில் அமைதிக் கென்றே !
மறம் மறந்து மனிதகுலம் தழைக்கும் ஆறாய்,
மதம் வகுத்தார் ;மனிதர்நமைப் பிரிக்க இல்லை !
உணர்வுகளை வெளிக்காட்டும் மொழிகள் வேறாய் ,
உண்டெனினும் உதட்டசைவு எல்லாம் ஒன்றே !
உண்கின்ற உணவுபல வேறென் றாலும்,
உயிர்வாழச் சக்திதரும் வயிற்றுக் கன்றோ ?
உடுத்துகிற துணிமணிகள் வேறென் றாலும்
ஒருநோக்கம் அதுகாக்கும் மானம் ஒன்றே !
உயிரினங்கள் வாழுகிற நிலங்கள் யாவும் ,
ஒன்றாகச் சேர்ந்தால்தான் உலகம் ஆகும் !
உன்குடும்பம் என்குடும்பம் வேறென் றாலும்,
உயிர்வாழும் நோக்கத்தில் ஒன்றே அன்றோ ?
தனிமரமோ தோப்பென்று ஆதல் இல்லை !
தனிநிலவால் பூமி இருள் போதல் இல்லை !
ஒருகையால் தட்டுவதால் ஓசை இல்லை !
ஒருமனிதன் தனித்திருந்தால் வாழ்க்கை இல்லை !
ஒருவீடு ஊராக ஆவ தில்லை !
பலவீடு சேர்ந்தால்தான் ஊரென் றாகும் !
ஒருநாட்டை உலகென்று சொல்வ தில்லை !
பலநாடு சேர்ந்தால்தான் உலகென் றாகும் !
அச்சாதி இச்சாதி என்றா லும்நம்
உட்சதையின் குருதி நிறம் ஒன்றே அன்றோ ?
என்றென்றும் உணர்வுகளை மதித்துக் காப்போம் ;
மதித்துரிமை கொடுப்பதனால் உயரப் பார்ப்போம் ;
உணர்வுகளை மதித்தால்தான் வெறுப்பு மாறும் !
உரிமைகளைக் கொடுத்தால்தான் கசப்பு தீரும் !
மதங்களிடை போதனைகள் பொதுவில் ஆக்கி ,
மனிதரிடை பேதங்கள் முற்றும் போக்கி ,
மறுமலர்ச்சி கண்டிடுவோம் எழுச்சி தோன்றும் !
அகமகிழ்ச்சி கொண்டிடுவோம் அயர்ச்சி நீங்கும் !
மதபேதம் மறந்திடுவோம் பொறுமை தோன்றும் !
இனபேதம் கடந்திடுவோம் ஒருமை தோன்றும் !
மனிதருக்குத் தீண்டாமை தேவை என்ன ?
மதவெறியைத் தூண்டுவதைத் தள்ளின் என்ன ?
மொழிபேதம் நமக்கெதற்குப் பேசின் என்ன ?
முனைப்போடு உழைத்தாலே வெல்லல் திண்ணம் !
வெற்றியினை விரும்பாதார் யாரும் இல்லை !
வீழ்ச்சியினை விரும்பிடுவார் எவரும் இல்லை !
கனிகள்பல இருக்கையிலே காய் எதற்கு ?
கலகம்பல கண்டபின்னும் வாள் எதற்கு ?
அமைதிவழி நின்றிடுவோம் வாழு தற்கு !
அன்புவழி கண்டிடுவோம் உயர்வ தற்கு !
அன்பொன்றே ஆயுதமாய்க் கொண்டு நாளும் ,
வென்றிடுவோம் ;சேர்ந்திடுவோம் ;உயர்ந்து வாழ்வோம் !

           
                                                                    
              

No comments:

Post a Comment