Pages

Wednesday, May 23, 2012

54 ariyum aranum







அரியும்அரனும்
+++++++++++++++++++
பொன்னேரி திரு ஆயர்பாடியுறை
ஸ்ரீ சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண மற்றும்
பஞ்சேஷ்டியுறை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வர
ஸ்தோத்திரப் பாசுரங்கள்!
---------------------------------------

கணபதி துதி
---------------
கரிமுகத்துக் கனவானே! கணபதியாம் குணவானே!
கரிகிருஷ்ணன் மருமகனே! கவினறிவின் தலைமகனே!
அரியவர்க்கும் அரியவனே! அகத்தீசன் திருமகனே!
அருளெமக்குத் தருபவனே! அடிபணிந்தோம் தூயவனே!



இருவர் துதி
-----------
கரிகாலன் கோவிலிலே காட்சிதரு பெருமாளே!
அரியவனாம் அகத்தியனால் அன்னைஉமை ஆண்டவனே!
அருந்தவத்தார் இருமுனிகள் ஆவலினால் சேர்ந்துவரும்,
பெரியமனம் கொண்டவரே! ஹரிஹரரே! போற்றுகிறோம்!
===============================================


ஓம் நமோ நாராயணா!
-------------------------------------
பொன்னேரி திரு ஆயர்பாடியுறை
ஸ்ரீ சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ணப் பெருமாள்
ஸ்தோத்திரப் பதிகங்கள்
------------------------------------------
கண்ணீரில் மிதக்கவரும் கஷ்டம் நீங்கி,
களிக்கின்ற நாளென்று வருமென் றேங்கி,
சென்னீரை வியர்வையென ஆறாய்ச் சிந்தி,
செய்துவரும் முயற்சியெலாம் வென்று ஓங்கி,
என்னேரம் வாழ்விலினி இடர்தீரு மென்பார்,
இனிதாகத் தான்வாழும் நிலைவேண்டு மென்பார்,
முன்னேர நன்னேரம் நெருங்கிவரும் போதில்,
மூடிவரும் குளம்மீள ஏங்கிவரும் மீன்கள்,
தண்ணீரைத் தான்தேடி வருகின்ற தகைபோல்,
தக்காரின் மொழிகேட்டு, கரிகிருஷ்ணன் ஆளும்,
பொன்னேரி தான்தேடி வருகைதரு வாரே!
புன்னகையும் மிகப்பெற்று பொலிவுபெறு வாரே!
---------------------------------------------------------------


1
கரிகாலன் கட்டியதால் கரிகிருஷ்ணன் ஆனாயோ?
கரியுன்னைக் காட்டியதால் கரிகிருஷ்ணன் ஆனாயோ?
கரிபோலே நிறமுனக்கு! அதனாலப் பேர் உனக்கா?
கரிமேகம் போன்றவனே! கருணைமழை பொழிபவனே!
2
சுற்றும் வினைகளெமைச் சூழாது தடுத்திடவும்,
சற்றும் மனந்தளரா சன்மார்க்கம் கொடுத்திடவும்,
புற்றும் கரைந்துருகப் பெரிதாகத் திரிந்தவனே!
சுற்றம் நீயென்றே சூழுகிறோம் கரிகிருஷ்ணா!
3
அஞ்சுபவர் வாழ்விலினி அச்சங்கள் நீங்கிடவும்,
வஞ்சகர்கள் சூழுகிற எச்சங்கள் தீர்ந்திடவும்,
வழுத்தும் எம்வாழ்வில் வளங்கள் ஓங்கிடவும்,
வருவாய் அருள்தருவாய்! வண்ணா! குலமன்னா!
4
ஆசு ரந்தபால் ஆதி உண்டவன்!
ஆதி சேஷன்மேல் பள்ளி கொண்டவன்!
நாசு ரந்தபா நாளும் பருகுவன்!
பாசு ரங்களைப் பாடி வருகவே!
5
ஆயர் பாடியுறை ஆயர்கள்கண் டெடுத்தவனே!
ஆயர் குலத்துதித்து ஆனிரைகள் சேர்த்தவனே!
நேயம் தழைத்திடவே வேய்ங்குழலை எடுத்தவனே!
மாயம் அழித்தெமது வாழ்விலிடர் தீர்ப்பவனே!
6
சாய்ந்தாலும் சாயாத ஆயக் கண்ணன்!
சாய்ந்தாரைச் சாய்க்காத அபயக் கண்ணன்!
மாய்ந்தாரை வாழ்விக்கும் மாயக் கண்ணன்!
பாய்ந்தோடி வருகின்ற நேயக் கண்ணன்!
7
பெருமாளின் தலத்தினிலே மகிழ மரம்!
வருகின்றோர் நலத்தினிலே மகிழு மரம்!
வாடினுமே நறுமணமே திகழு மரம்!
வாடியவர் குறைதீர்ந்தே புகழு மரம்!
8
தீங்குவரின் தாங்கவரும் நீல வண்ணன்;
தீயவரை மாய்த்தொழிக்கும் ஆழிக் கையன்;
தூயவளாம் துரோபதையின் அன்பு அண்ணன்!
துயர் துடைத்து நமைக்காக்க முந்தும் ஐயன்!
9
கதிரவன் கிரணம் கருவறை தவழும்;
மதிமுகம் தன்னில் புன்னகை திகழும்;
நின்றகோ லத்தில் திருமகள் தரிசனம்;
சென்றபேர்க் கெல்லாம் நன்மைகள் நிதர்சனம்!

10
சௌந்தர்ய வல்லியால் சௌந்தர்யம் கூடும்;
சௌந்தர்ய வல்லியால் சம்பத்து நாடும்;
சௌந்தர்ய வல்லியால் சங்கடம் தீரும்;
சௌந்தர்ய வல்லியால் சகலமும் சேருமே!

====================================

ஓம் நம சிவாய
===============
பஞ்செட்டி என வழங்கும்,பஞ்சேஷ்டியுறை
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வர
ஸ்தோத்திரப் பதிகங்கள்
_____________________________________________

ஊரெட்டும் நமைச்சுற்றி வருவ தன்றி,
ஓரெட்டுச் சித்திகளும் தருவ தென்ன?
ஈரெட்டாய் எந்நாளும் வாழ்வ தன்றி,
ஈரெட்டுப் பேறுகளால் விளைவ தென்ன?
மூவெட்டில் மண்ணளந்தான் மைத்து னர்க்கு,
முன்வந்து வணங்கற்கு மயக்க மென்ன?
நாலெட்டுப் பல்போன பிறகு நம்மால்,
நடந்துவரல் அரிதென்றே அருகே நான்கு
அஞ்செட்டில் அமைதிதரும் பாங்கில் நாளும்,
அயராமல் அமர்ந்துஅருள் பொங்க ஆளும்,
பஞ்செட்டித் தலமுடையான் பரிந்து வந்தால்,
பக்தர்நமின் பாவவினை பறந்தி டாதோ?
--------------------------------------------------------------- 



1
சோழர்கள் காலத்தில் ஆலயமே கண்டவனே!
சுகமாக வில்வத்தின் நிழலடியைக் கொண்டவனே!
ஆழியிலே எழுந்திட்ட ஆலத்தை உண்டவனே!
அன்பான உமையவளால் அற்புதமாய் மீண்டவனே!

2
அகத்தியன் அறிவுரையால் ஆன்றதவம் செய்யவென்று,
அன்னையாம் உன்கரத்தால் அன்றெழுந்து வரப்பெற்று,
அகத்தீஸ் வரனென்றே அதனாலே பேர்பெற்று,
அல்லல் அகன்றதனால் ஆனந்த வ(ல்)லியானாய்!
3
அஞ்சும் நிலைவிடுத்து, அறத்தைக் கையெடுத்து,
அகந்தை அறுத்தெறிந்து, அகத்தில் நிறுத்துதற்கு,
அகத்தைத் திருத்தியுந்தன், அருளைப் பெறுவதற்கு,
அகத்தீஸ் வரவுன்னை அனுதினம் வேண்டுகிறோம்!
4
ஆழியில் எழுந்த ஆலத்தை உண்டவன்!
அரவம் மாலையாய்க் கோலத்தில் கொண்டவன்!
காளையில் அமர்ந்தே ஞாலத்தில் ஊர்பவன்!
காரணன் அரனைப் பரவியே வருகவே!
5
உமையவள் பூஜித்த உமையொரு பாகன்;
உணவென யாசித்த யாகஅவிர்ப் பாகன்;
சூரரைத் தண்டித்த தீரதேர்ப் பாகன்;
குறைமதி கண்டித்த பிறைதலைப் பாகன்!
6
திருத்தொண்டு செய்திடவே தவமேற் கொண்ட
கருத்தின்றி செய்தஉமை அவமே கண்டு,
கொதித்ததனால் பதிஈசன் கொடுத்த சாபம்,
கெடுத்ததுதான் ஆனந்த தீர்த்த மாகும்!
7
பெருமானின் கோவிலிலே அக்னி தீர்த்தம்;
பௌர்ணமியில் மூழ்கையிலே துக்கம் தீர்க்கும்;
நெய்யினிலே விளக்கேற்றின் மிகசி லாக்யம்;
கையினிலே அளிப்பானே சகல பாக்யம்!
8

தீங்குகளைச் சுட்டெரிக்கும் வெற்றிச் சித்தன்;

ஏங்கிவரு வோரணைக்கும் பெற்றிப் புத்தன்;
நீறணிந்த மேனியனாய் அலையும் பித்தன்;
நித்தமொரு நாடகமே ஆடும் எத்தன்!
9
பௌர்ணமி நிலவின் பனிக்கதிர் தவழும்;
பனிக்கதிர் படிந்தே பொற்குளம் திகழும்;
பொற்குளம் மூழ்கின் உமையவள் வருவாள்;
உமையவள் வருகை உயர்வினைத் தருமே!
10
ஆனந்த வல்லியாள் ஆக்கமே தருவாள்;
ஆனந்த வல்லியாள் ஊக்கமே தருவாள்;
ஆனந்த வல்லியாள் ஆனந்தம் தருவாள்;
ஆனந்த வல்லியாள் அனந்தமும் தருவாள்!






No comments:

Post a Comment