Pages

Monday, May 14, 2012

52 Secularism

Secularism

மதசார்பின்மை
++++++++++++++


கொஞ்சமல்ல, நிறையவே யோசனை செய்து பார்த்தால், அரசோடு மதமும் பின்னிப் பிணைந்த ஒன்று என்றே நினைக்கத் தோன்றுகிறது! மக்களை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் ஏதோ ஒரு மதத்தைத் தழுவியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்!
இங்கு நமது மன்னர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், பின்னர்
மொகலாயர்களின் வருகைக்குப் பிறகு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் களாகவும் இருந்தார்கள்!
இங்கிலாந்தில் கிரிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்! பின்னர் சொந்த காரணங்களினால், வேறு மதத்துக்குத் தாவியதும் உண்டு!இங்கிலாந்து மன்னர், காதல் காரணமாக ரோமன் கத்தோலிக்கிலிருந்து புராட்டஸ்டென்டுக்கு மாறினார்!
நமது மன்னர் அசோகர், யுத்தம் காரணமாக இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார்!
பாண்டியமன்னர், சைவத்திலிருந்து சமணத்துக்கு மாறினார்; அப்போது அவருக்கு வந்த வெப்பு நோயை அவர்களால் தீர்க்கமுடியவில்லை! அதைத் தீர்த்துவைத்தவர் திருஞான சம்பந்தர்; ஆகையால் மறுபடியும் சைவத்துக்குத் தாவினார்!
அப்படி அவர்கள் ஆண்டபோது, அவர்களின் மதத்தையே மக்களும் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தியவர்களும் உண்டு! அவரவர் விருப்பம் என்று பெருந்தன்மையாக நடந்து கொண்டவர்களும் உண்டு!
அக்பர், ஜெசியா வரியை நீக்கினார்! ராஜபுத்திரப் பெண்ணை மணந்து கொண்டார்! அக்பரின் அவையில் இஸ்லாமியர் அல்லாத பீர்பால் என்ற விகடகவி வெகு பிரசித்தம்!
மொஹமத்கான், தன் நண்பன் தேசிங்கு ராஜாவுக்காக, தனது திருமணத்தையும் பொருட்படுத்தாமல், எதிரி படையெடுத்து வந்துவிட்டான் என்று, போருக்குப் புறப்பட்டான்! இவை மதசார்பற்ற நிலை!
இரண்ய கசிபு என்ற மன்னனோ, தனது குடிமக்கள் அனைவரும், தன்னையே வணங்க வேண்டும்; தன் புகழையே பாடவேண்டும் என்று கட்டளை இட்டான்; கவிக்குயில் எழுதுகிறார்;" He tore up the vedas; Killed the priests; and commanded all his subjects to worship him" இப்படி நடந்து கொண்ட சில கொடுங்கோல் மன்னர்களும் இருந்தனர்! இது மத சார்பற்ற நிலை அல்ல!
சாலமன் என்ற மன்னன், அற்ப எறும்புகளுக்காக தன் படை சென்ற பாதையையே மாற்றிக் கொண்டான்!எளிய தனதுகுடிமக்களின் நலமே தனது நலம் என்றான் அவன். இவ்வாறு பலதரப்பட்ட மன்னர்கள் ஆண்டனர்; என்றாலும் அவர்கள் ஆண்டபோதுதான், காலத்துக்கும் அழியாத கலையம்சம் கொண்ட கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் அவர்களால் கட்டப்பட்டன!
மன்னராட்சியில் காணப்பட்ட, ஆள்பவருக்கு ஏற்றபடி, மதமாற்றம் என்னும் இந்தக் குறைபாடு, களையப்படவேண்டும் என்று மக்களாட்சியில், யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம் என்றுதான் சட்டம் கொண்டு வந்தார்கள்! ஆதலால் நமது நாடு மதசார்பற்ற நாடு என்றும் சொல்லிக் கொண்டார்கள்!
ஆனால் மதசார்பின்மை என்பதற்கு அவர்கள் தருகின்ற விளக்கங்கள் தான் வேடிக்கையாகவும், வேதனையைத் தருவதாகவும் உள்ளன!
"நீ உன் வழியில் போ! நான் என் வழியில் போகிறேன்! ஆனால் இருவரும் நண்பர்களாக இருப்போம்!" என்பது தான் மதசார்பின்மை!
"உன்னை நான் கட்டாயப் படுத்த மாட்டேன்! என்னை நீ கட்டாயப் படுத்தாதே!" என்பதுதான் எழுதப்படாத ஒப்பந்தம்!
"உன் வீட்டுக்கு நான் வருவேன்; என் வீட்டுக்கு நீயும் வா!" என்பதுதான் உண்மையான நடு நிலை!
"All the roads lead to Rome" என்பதன் பொருளும் இதுதான்!
ஆனால் இங்கு நாம் அரசியல் செய்வது ஏறுக்கு மாறாக இருக்கிறது!
பிற மதத்தினர், அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளலாமாம்! ஆனால் நான் இந்து என்று சொன்னால், அவன் மதவெறியனாம்! அவன் மதசார்பின்மைக்கு விரோதியாம்! இது வேதனையல்லவா?
இதில், வேடிக்கை என்னவென்றால், ஒரு இந்து மதத்தைச் சேர்ந்தவரும், வேறொரு மதத்தைச் சேர்ந்தவரும் கைகுலுக்கிக் கொள்கிறார்கள்! பேசிக்கொள்கிறார்கள்! அவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது! ஆனால் இவர்களைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்கிறார்!
"மத சார்பின்மையை கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் இவர் (பிற மதத்தவர்) ஒரு இந்துவுடன் கை குலுக்கலாமா? இவர் உண்மையிலேயே மதசார்பற்றவரா?" என்று; ஏனென்றால் அவர் அரசியல்வாதியாம்! அரசியல் வாதிகளுக்கு பரந்த நோக்கம் இருக்கக் கூடாது என்று சொல்கிறாரா?சொன்னவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்! அப்படியானால் இதுவரை இவரோடு கைகுலுக்கியவர்கள் எல்லோரும் ஊழல் வாதிகளா? இவரோடு பேசியவர்கள், மற்றும் பேசுகின்றவர்கள் எல்லோரும் ஊழல் செய்தவர்களா? இவர்கள் மதசார்பின்மையை அவ்வளவு தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்!


மதசார்பற்றவர்கள், என்று கூறிக்கொள்கின்ற இவர்கள் பிறமதத்தவர் விழாக்களில் பங்கேற்கலாம்! ஆனால் இந்து சமய விழாக்களில் பங்கேற்றால், அவர்களின் மதசார்பின்மைக்குப் பங்கம் வந்துவிடுமாம்! எப்படி? இது வேடிக்கையில்லையா?
மதசார்பின்மை என்றால், யாருக்கும் எந்த சலுகையோ, அல்லது விதிவிலக்கோ மதத்தின் பெயரால் வழங்குதல் கூடாது! பொருளாதாரத்தின் அடிப்படையிலே மட்டுமே எந்த ஒரு சலுகையும் வழங்கப் படவேண்டும்! மதத்தின் பெயரால் சலுகைகள் வழங்கப்படுமாயின், அது மதசார்பின்மை ஆகாது! ஓட்டு வங்கி அரசியல் என்கிறார்கள்! ஓட்டு எல்லோருக்கும் தான் இருக்கிறது! அவர்கள் சலுகை கொடுத்தால்தான் போடுவார்கள்! இவர்கள் கொடுக்காவிட்டாலும் போடுவார்களா, என்ன? போடவேண்டும் என்று என்ன கட்டாயம்?
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தால் அது இவர்களக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட சட்டம் என்கிறார்கள்! யாரைக் குறிவைத்து?
காட்டாய மாற்றம் யார் செய்கின்றார்களோ அவர்களைக் குறிவைத்து! இதில் அவ்வாறு செய்யாதவர்கள் பயப்பட என்ன இருக்கிறது?
இந்த குளறுபடிகள் எல்லாம் இப்போதுதான்! என் சின்ன வயதில்,எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! என் அப்பாவும் ஒரு இஸ்லாமியரும் நண்பர்கள்!அவர் என் அம்மாவை தங்கை என்பார்! என் அப்பா அவரின் துணைவியாரைத் தங்கை என்பார்! தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் எங்கள் வீட்டில் அவர்களுக்கு விருந்து! ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில் அவர்கள் வீட்டில் எங்களுக்கு விருந்து! நினைத்தபோது அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்!அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போவோம்! வீட்டில் தொழுகை நடக்கும்போது நாங்களும் மண்டியிட்டு அமர்வோம்! எங்கள் வீட்டு பூஜையின்போது அவர்களும் கலந்து கொண்டு பிரசாதத்தை வாங்கிக் கொள்வார்கள்!
நான் புதுக்கோட்டையில் பணியில் இருந்தபோதும் இதே மாதிரிதான்! எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு இஸ்லாமியர்! எங்களுக்குள் எந்த வேறுபாடும் இருந்ததில்லை! அந்த நட்பு இன்னும் தொடர்கிறது! அவர்கள் வந்து போகிறார்கள்! நாங்களும் சென்று வருகிறோம்! அதேபோலவே ஒரு கிரிஸ்தவ நண்பரின் குடும்பத்தினரும் நாங்களும் பழகினோம்! நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருந்தோம்; இருக்கிறோம் !
கிராமப் புறங்களில், இந்துக் கோவிலில் மலர் அலங்காரம் செய்வதை தலைமுறை தலைமுறையாகச் செய்யும் முஸ்லீம் குடும்பத்தினர் இருக்கிறார்கள்! இதை அவர்கள் பெருமையாகவும் எண்ணுகிறார்கள்!
இந்து மதத்தினர் சாமி ஊர்வலம் நடத்தும்போது தங்கள் முஸ்லீம் சமுதாய மக்களின் சார்பில் அதற்கு மரியாதை செய்யும் வழக்கமும் சில ஊர்களில் இருக்கிறது! இந்து மதத்தினர், வெள்ளிக்கிழமைகளில், தங்கள் குழந்தைகளை,பள்ளிவாசலுக்குத் தூக்கிச் சென்று அங்கு மந்திரிக்கும் வழக்கம் இப்போதும் உண்டு!
இந்துமதத்தினர், தர்காக்களுக்கு மலராடை செலுத்தும் காட்சிகளையும் காணலாம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஐயப்பனின் இஸ்லாமியத் தோழர் என்று அழைக்கப்படும் வாவருக்கு, தனி சன்னிதானம் இருக்கிறது! அங்கு வணங்கிய பிறகுதான், மலை ஏறுகிறார்கள்!
திருப்பதியில், வெங்கடாஜலபதியின் பக்தையான இஸ்லாமிய துலுக்க நாச்சியாருக்கு, மலை அடிவாரத்தில் ஒரு சன்னிதி உண்டு! அங்கு வணங்கிய பிறகே, பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்!
ஆண்டுதோறும் நாகூர் தர்காவுக்கு, எல்லா மதத்தினரும் புனித யாத்திரை செல்கிறார்கள்!அதேபோலவே, நாகபட்டினம் வேளாங்கன்னி மாதாகோவிலுக்கு, எல்லா மதத்தினரும் புனித யாத்திரை செல்கிறார்கள்!
மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்! அவர்களைப் பிரிப்பது எல்லாம் ஒருசில அரசியல் வாதிகளே! ஏனென்றால் மதசார்பின்மையை அவர்கள் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள் என்று மக்களுக்குக் காட்ட வேண்டுமாம்!
அரசியல்வாதிகள் என்று ஒட்டுமொத்தமாகச் சொன்னால் அதுவும் தவறு! எல்லோரும் தவறு செய்யவில்லை என்றாலும் ஒருசிலர் செய்கின்ற தவறு எல்லோரையும் சென்றடைகின்றது!
ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு ஆசிரிய சமூகத்தையே பாதிக்கிறது!
ஒரு சில மருத்துவர்கள் செய்யும் தவறு மருத்துவ சமுதாயத்தையே பாதிக்கிறது!
நான்கு பேர் நிற்கின்ற ஒரு தேர்தலில் நூற்றுக்கு நாற்பது பேர் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், "நான் இந்தத் தொகுதியின் பிரதிநிதி" என்று சொல்வதைப் போல!
"போக்கற்றவர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்" என்று மேலை நாட்டில் ஒருவர் சொல்கின்றாரே என நிருபர் ஒருவர் அண்ணாவிடம் கேட்டாராம்!
"அவர்கள் நாட்டு அரசியலைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்" என்றாராம் அண்ணா! இது அன்று சொன்னது! இன்று அப்படியா?
தீவிரவாதத்திலும் இப்போது மத தீவிரவாதம் என்று கண்டு பிடித்திருக்கிறார் கள்! தீவிரவாதம் என்றாலே தீவிரவாதம் தான்! அதில் மத தீவிரவாதம் என்ன?
பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் தான் கையாண்டார்கள் என்பார்கள்!
இப்போது நம்மை ஆள்கின்றவர்களே கையாள்கிறார்கள்!
ஒருசார்பின்மை என்றால், அனைத்திலும் சமநீதி இருக்கவேண்டும்! ஒரு கண்ணில் வெண்ணெய்; மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு! இது என்ன நீதி? எல்லா மதத்தினரும் சமமாக நடத்தப் படவேண்டும்! எல்லோருக்கும் சரிசமமாக சலுகைகள் வழங்கப் படவேண்டும்! எல்லா மதங்களையும் எல்லோரும் மதிக்கவேண்டும்! ஒரு மதத்தைத் தாங்கிப் பிடித்து இன்னொரு மதத்தை இழிவு படுத்துவது, மத சார்பின்மை அல்ல! அது ஒரு சார்பு! எல்லோரும் ஓட்டுப் போட்டதால் வந்து விட்டு, ஒருசாராரைத் தள்ளி வைப்பது ஜனநாயகம் அல்ல!

இன்று ஆளுக்கு ஆள், தெருவுக்குத் தெரு மதம் மாற்றுகிறேன் என்று கிளம்பி விட்டார்கள்! இத்தனை பேரை மாற்றினால், இவ்வளவு என்று மார்க்கெட்டிங் வியாபாரமாகி விட்டது!
ஒரு சாரார், கையில் ஒலிபெருக்கியோடு, மதப்பிரசாரப் பாடல்களைப் பாடியவாறு, துண்டுப் பிரசுரங்களை, வினியோகிக் கிறார்கள்! மருத்துவமனைகளில், பக்தர்கள் கூடும் கோவில் வாசல்களில், வீட்டுக்கு வீடு! போக்குவரத்து நெருக்கடி மிகுந்த, நெடுஞ்சாலை சந்திப்புகளில், இடையில் புகுந்து, நடந்து செல்லும் பாதசாரிகளிடம், வாகன ஓட்டிகளிடம் பிரசுரங்களை நீட்டுகிறார்கள்! சாலைகளில் இவ்வாறு செய்வது விபத்தை விளைவிக்காதா? சாலை விதிகளை மீறுவதாகாதா?
மத நல்லிணக்கம் கெடாதா? வன்முறைக்கு வழிவகுக்காதா?
முன்பெல்லாம் ஒலிபெருக்கி வைக்க வேண்டுமானால் காவல்துறையின் அனுமதியைப் பெறவேண்டும்!
இப்போது அங்கங்கே ஒலிபெருக்கியும் வைத்து மதப் பிரசாரப் பாடல்களை மிகுந்த சத்தத்துடன் ஒலிபரப்புகிறார்கள்! அதோடு நிற்பதில்லை! அடுத்த மதத்தைப் பற்றித் தாழ்வாகப் பேசவும் செய்வார்கள்! இதற்கு அனுமதி பெறுகிறார்களா என்று தெரியவில்லை!
சிறிது காலத்துக்கு முன் ஜாதித் தீண்டாமை இருந்தது!
அப்புறம் இன, மொழித் தீண்டாமை வந்தது!
இப்போது மதத்தீண்டாமை வந்திருக்கிறது! இதை போக்க வேண்டியவர்களே வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்!
இதுதான் மதசார்பற்ற நிலை போலும்!
மதம் என்பது மனிதனின் மதத்தைப் போக்கத்தான்! மனிதர்களை நல்வழிப் படுத்தத்தான்! மதம் பிடிக்கவைத்து வெறியை வளர்க்க அல்ல! அவர்களை வேறுபட வைத்து அவர்களுக்குள்ளே சண்டை போட வைக்க அல்ல!
அந்தந்த நாடுகளில், அவரவர்களின் கலாசாரம் மற்றும் காலநிலைக்கேற்ப, அந்நாட்டுப் பெரியோர்களால், மக்களை நல்வழிப்படுத்த மதம் ஸ்தாபிக்கப் பட்டது! அவரவருக்கு, அவரவர் மதம் உயர்ந்தது தான்! இதில் பேதம் பார்க்கத் தேவை இல்லை! அனைத்து மதங்களும், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளையே போதிக்கின்றன! இதை பின்பற்றாமையினால் வந்த விளைவுகளே, இத்தனை இன்னல்களுக்கும் காரணம்! அவ்வாறு பின்பற்றாமைக்குக் காரணம், இடையில் புகுந்த சில சுயநலமிகள், அத்தத்துவங்களைத் திரித்துக் கூறி, நமக்கு மத்தியில் பிரிவினை எண்ணங்களைப் புகுத்தியதே ஆகும்! இந்த உண்மையை உணர்ந்து, அனைவரும் ஒன்று, என்று நடந்து கொள்வதே, மதசார்பின்மையின் அடையாளம்! அவர்களுடைய சுயநலத்துக்கு, நாம் இரையாகி விடக்கூடாது! அத்தகைய நிலை, வருமாயின், அதுதான் மதசார்பற்ற நிலை!


      

No comments:

Post a Comment