Pages

Friday, May 4, 2012

49 ellaamE Copy dhaan!

எல்லாமே,காப்பிதான்!

சமர்ப்பணம்
------------------
நான் பெற்றுள்ள இந்த ஞானம் ( இது எனக்குப் போதும் ) என் தந்தையிடம் நான் அடித்த காப்பி!
எனக்கு அமைந்துள்ள இந்தப் பண்பு நலன்கள் (இவற்றை விட வேறு எனக்குத் தேவையில்லை ) என் அன்னையிடம் நான் அடித்த காப்பி!
எனவே இக்கட்டுரை அவர்களுக்கு சமர்ப்பணம்!
--------------------------------------------------------------
நாங்கள் படித்தகாலத்தில், தேர்வு எழுதும்போது கொஞ்சம் அப்படி இப்படி திரும்பினாலே போதும்! எங்கள் ஆசிரியர், "டேய்! அங்கே என்ன பார்வை? காப்பி அடிக்கலாம்னு பாக்கிறயா? ஓம் பேப்பரைப் பாத்து எழுது நாயி!", என்று செல்லமாகக் கடிந்து கொள்வார்! (இங்கே கவனிக்க வேண்டும்! காப்பி அடிக்கிறயா? என்றல்ல; அடிக்கப் பாக்கிறயா? என்று தான்) ஏனென்றால் காப்பி அடிக்கும் பழக்கமெல்லாம் அப்போது அவ்வளவாகக் கிடையாது! இதை நாங்கள் சீரியசாகவும் எடுத்துக் கொள்வதில்லை! சொந்தமாக எழுதி பாஸ் செய்வதையே நாங்கள் விரும்பினோம்! ஆகையால் தேர்வுக்கூடத்தைக் கண்காணிக்க பறக்கும் படையும் அப்போது கிடையாது! ஆனால் காப்பி அடிப்பது ? (எடுப்பது) எப்போதோ தொடங்கி விட்டது!
காப்பி அடிப்பதும், காப்பி எடுப்பதும் இன்று நேற்று தொடங்கிய வழக்கமல்ல!

பிரம்மனே பிரணவ மந்திரத்தை முருகனிடம்தான் காப்பியடித்தான்!




மஹாபாரதத்தை, வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் காப்பி எடுத்தார்!











ராமாயணம், வால்மீகியிடம் கம்பர் அடித்த காப்பி!














                                                                 




திருக்குர் ஆனை, அசரீரி சொல்லக் கேட்டு, நபிகள் நாயகம் காப்பி எடுத்தார்!




பைபிள், ஏசுகிறிஸ்துவிடம் அவருடைய சீடர்கள் அடித்த காப்பி!
இதோ இந்தக் கட்டிடம் கூட சிலுவையின் காப்பி தான்!




அதனால், காப்பி எனப்படுவது தொன்மை வாய்ந்தது மட்டுமல்ல! சிறப்பு வாய்ந்ததும் ஆகும்!

இப்போது, பெருமளவில் காப்பியடிக்கப் படுகிறது! அதனாலேயே அது பெருமளவில் பேசவும் படுகிறது

காப்பி அடித்தல் என்று சொல்லலாமா?
காப்பி என்றால் நகல் என்று பொருள்! ஒரு பிரதியைப் பார்த்து அதைப் போன்று மற்றொன்றைத் தயாரிப்பது! இதை காப்பி எடுத்தல் என்றுதான் சொல்லவேண்டும்! இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், காப்பி அடிப்பதற்கும், காப்பி எடுப்பதற்கும் வேறுபாடு உண்டு, என்பதாகும்!
ஒன்றைப் பார்த்து, அல்லது ஒருவர் சொல்ல, அதைக்கேட்டு, மற்றொரு நகல் எடுத்தால் அது காப்பி எடுப்பது!
முதலிலேயே ஒன்றைப் பார்த்து, அல்லது கேட்டு, அதை நினைவில் வைத்துக் கொண்டு, அதையே மறுபடியும் எழுதுவது, அல்லது தயாரிப்பது, காப்பியடிப்பது!

காப்பி அடிப்பது தவறாகாது! என்று பட்டென்று சொல்லி விடலாம்!
ஆனால், காப்பி எடுப்பது சரியா? என்பதை யோசித்துத்தான் சொல்ல முடியும்! அது எங்கே, எப்போது மற்றும் எப்படி எடுக்கப் படுகிறது, என்று பார்க்கவேண்டும்!


தயார் செய்யப் பட்ட அறிக்கைகளையும், நூல்களையும் பிறருக்கு வினியோகம் செய்வதற்காகக் காப்பி எடுப்பதும், ஆசிரியரால் வழங்கப்பட்ட பாடங்களைப் படிப்பதற்காக மாணவர்கள் அதைக் காப்பி எடுப்பதும், பதிவகங்களில், பதிவு செய்வதற்காக, மூலப் பத்திரங்களைக் காப்பி எடுப்பதும், ஒருவர் சொல்லிக்கொண்டே போக, மற்றவர் அதைக் குறித்து வைத்துக் கொண்டு காப்பி எடுப்பதும் தவறாகாது!
ஆனால், கல்வி நிலையத் தேர்வுக்கூடங்களிலும், அலுவலக வேலைகளுக்கான நேர்முகத் தேர்வு மையங்களிலும், காப்பி அடிப்பதற்குப் பதிலாகக், காப்பி எடுப்பது தவறாகும்! அத்தகைய இடங்களில் காப்பி எடுப்பதற்குக் காரணமே, அது சிலரால் மறைமுகமாக அனுமதிக்கப் படுவதோடு, போதுமான அளவுக்கோ, அல்லது சுத்தமாகவோ காப்பியடிக்கத் தெரியாததே ஆகும்! காப்பியடிக்கத் தெரியாததற்குக் காரணம் படிக்காததே ஆகும்! எவ்வாறேனும் அது தவறுதான்! நாம் இங்கே காப்பி அடிப்பதைப் பற்றிப் பார்ப்போம்!
காப்பி அடிப்பது தவறில்லை என்று நான் எப்படிச் சொல்கிறேன் என்று கேளுங்கள்!




இந்த உலகத்தில் பிறந்த உயிரினங்கள் எல்லாம் ஒன்றைப் பார்த்துத்தான், அதாவது, ஒன்றைப்பார்த்து, காப்பி அடித்துத்தான் செயல்படுகின்றன!

குழந்தைப் பருவத்தில், பெற்றவர்கள் சொல்லிக் கொடுத்தவைகளைக் காப்பி அடித்துத்தான், அம்மா, அப்பா என்று சொல்லக் கற்றுக் கொண்டோம்!

அவர்களின் நடை, உடை பாவனைகளைக் காப்பியடித்துத்தான் நடக்கக் கற்றுக் கொண்டோம்!
சாப்பிட, தூங்க, பேச என்று எல்லாமே அவர்களைப் பார்த்து நாம் அடித்த காப்பிதான்!




அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, மாமா, அத்தை ஆகியோரிடமிருந்து, பாசம் காட்டுவதைக் காப்பியடித்தோம்!



                                                                            












                                                                                                                                         


தாத்தா,பாட்டியிடமிருந்து,
அம்புலிமாமா கதைகளையும் நிலாச்சோறு
சாப்பிடுவதையும் காப்பியடித்தோம்!




                                                                                                          








உண்பதும், உடுத்துவதும் எப்படி என்று நம் பெற்றோரிடமிருந்து நாம் காப்பியடித்தோம்!








சக தோழர்களிடமிருந்துதான் விளையாடுவதைக் காப்பியடித்தோம்

திட்ட, கிள்ள, அடிக்க எல்லாம் அவர்களிடம் நாம் அடித்த காப்பி தான்!







அனாவும், ஆவன்னாவும், அவ்வையாரின் ஆத்திச்சூடியும், ஆரம்பப்பள்ளி தமிழ் ஆசிரியரிடம் நாம் அடித்த காப்பி!

ஒன்றும் ஒன்றும் இரண்டும், ஓரொம்போது ஒன்பதும், ஆரம்பப்பள்ளி கணித ஆசிரியரிடம் நாம் அடித்த காப்பி!

Jack and Jill, went up the hill, ஆரம்பப்பள்ளி ஆங்கில ஆசிரியரிடம் நாம் அடித்த காப்பி!

சுற்றுப்புறமும், சுகாதாரமும் ஆரம்பப்பள்ளி அறிவியல் ஆசிரியரிடம் நாம் அடித்த காப்பி!

மூவேந்தரையும், மொகலாய மன்னர்களையும் ஆரம்பப் பள்ளி சரித்திர ஆசிரியரிடமிருந்து காப்பியடித்தோம்!

கில்லியும் கிரிக்கெட்டும், வயதுக்கு வந்த நம் நண்பர்களிடமிருந்து நாம் அடித்த காப்பி!
                                                                                        
கம்பனும், வள்ளுவனும், லாகிர்தமும், அல்ஜீப்ராவும், ஷெல்லியும், ஷேக்ஸ் பியரும், மற்றும் விண்வெளியும், விந்தைகளும், உயர்நிலை, மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் நாம் அடித்த காப்பி!

குதம்பைச் சித்தரிடமிருந்தும், பட்டினத்தாரிடமிருந்தும் தத்துவங்களையும், நீதிகளையும் காப்பி யடித்தோம்!

மூலிகைகளையும், மருத்துவத்தையும் பதினெட்டுச் சித்தர்களிடமிருந்து காப்பியடித்தோம்!

இலக்கணங்கள், தொல்காப்பியரிடமிருந்தும், அகத்தியரிடமிருந்தும் நாம் அடித்த காப்பி!

இலக்கியங்கள், கம்பனிடமிருந்தும், வள்ளுவனிடமிருந்தும், இளங்கோவிட மிருந்தும், மற்றும் பலரிடமிருந்தும் நாம் அடித்த காப்பி!

அகநானூறும், புறநானூறும் படித்து காதலையும், வீரத்தையும் காப்பியடித்தோம்!

கடையேழு வள்ளல்களைப் பார்த்து, கொடையைக் காப்பியடித்தோம்!

நதிகளே நாகரீகத்தின் தொட்டில் என்று படித்து வாழ்க்கையைக் காப்பியடித்தோம்!

ராணி மங்கம்மாவயும், ஷெர்ஷாவையும் பார்த்து, ஆட்சிமுறையைக் காப்பியடித்தோம்!

மதமும், ஆன்மீகமும் நமது மூதாதையரிடமிருந்து நாம் அடித்த காப்பி!






இசை, நடனம், சிற்பம் என்று ஆய கலைகள் அறுபத்து நான்கும் நமது முன்னோரிடமிருந்து நாம் அடித்த காப்பி!



பேசும் எதிரொலி கேட்டு
வானொலியைக் காப்பி
அடித்தோம்!

                                                          
நீந்தும் மீன்களைப்பார்த்து
படகையும், கப்பலையும்
காப்பி யடித்தோம்!






பறக்கும்
பறவைகளைப்
பார்த்து, ஆகாய
ஊர்திகளைக்

காப்பியடித்தோம்!





மின்னும் மின்னலைப் பார்த்து, மின்சாரத்தைக் காப்பி அடித்தோம்!






உருண்டுவந்தமரக்கட்டை
களைப்பார்த்து, சக்கரங்க
ளைக்காப்பியடித்தோம்!
         






இயற்கையைப் பார்த்தே எல்லாவற்றையும் காப்பியடித்தோம்!
நாம் எதைச்செய்தாலும் அது காப்பியாகவே இருக்கும்!

காப்பியாக இல்லாமல் எதையாவது செய்ய முடியுமா? என்று யோசித்தால்;
ஊஹூம்! ஒன்றுமில்லை!
பிறப்பையும் இறப்பையும் கூட காப்பி இல்லை, என்று தள்ள முடியாது!
திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மற்றும் நாடகங்களிலிருந்து வன்முறைகளையும், நன்முறைகளையும் காப்பியடித்துக் கொண்டிருக்கின்றோம்! இதோ இந்தப்படம் எதனுடைய காப்பி என்று உங்களுக்குத் தெரியும்!
தவறு செய்கின்றவர்கள், அவர்களைக் காப்பி யடித்தோம்! இவர்களைக் காப்பியடித்தோம் என்பார்கள்! அது சரியில்லை! சரியானவர் களைக் காப்பி யடிக்கவில்லை என்பதுதான், சரி!

"இனிய உளவாக இன்னாத கூறல்,
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற குறளை அவர்கள் காப்பியடிக்கத் தவறி விட்டார்கள்!

காப்பியில்லாமல், புதிதாக நாம் எதுவும் செய்துவிடவில்லை! செய்து விடவும் முடியாது! எல்லாமே பெரியவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டார்கள்! இனிப் புதிதாக நாம் எதைச் செய்வது?

காப்பி அடிப்பது என்பது ஒரு கலை! அதை முறையாகச் செய்தால், இது காப்பியா? என்ற சந்தேகம் வந்துவிடும்!
சங்க காலங்களில் நமது புலவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தார்களோ, அந்த அளவுக்கு மிதமிஞ்சிய கர்வம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்! இராமநாதபுரத்தில், சேதுபதி மன்னரின் அவையில், பெரும் தமிழ்ப்புலவர் பலர் இருந்தனர்! அவர்களில் மாம்பழக் கவிராயரும் ஒருவர்! இவர் ஒரு பிறவிக் குருடர்! அதனாலேயே எல்லோருக்கும் இவரைக் கண்டாலே இகழ்ச்சி! இவர் அந்தப் புலவர் குழுவில் இடம் பெற்றதே, ஒரு சுவையான நிகழ்ச்சி! முதலில் இவரை யாரும் மதிக்கவில்லை! இவரைப் புலவர் என்றே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை! ஒரு நாள் ஆணவம் பிடித்த பண்டிதர் ஒருவர் தமிழ்ப்பாட்டு ஒன்று பாடினார்! புலவர்கள் எல்லோரும் மிகச்சிறப்பான பாட்டு, என்று புகழ்ந்தார்கள்! மன்னரும் மகிழ்ந்து, பாராட்டி, பரிசளிப்பதற்காக அந்தப் புலவரைத் தன்னருகே அழைத்தார்! பரிசை அவர் வழங்கவிருந்த சமயம், மாம்பழக்கவிராயர், "மன்னா! தாங்கள் கொஞ்சம் பொறுக்கவேண்டும்! இந்தப் பரிசை பெறத்தக்கவர் அவர் அல்லர்!" என்றார்! மன்னர் திகைத்தார்! புலவர்கள் அனைவரும் காரணம் புரியாமல் விழித்தனர்! பண்டிதருக்கோ, குப்பென்று உடல் வியர்த்தது! இது என்ன புதுக்கதை என்று பதைத்தார்! மன்னர் கேட்டார், "அப்படியென்றால் இந்தப் பரிசைப் பெறத்தக்கவர் யார்?" என்று; "அடியேன் தான் மன்னா!" என்றார், அந்தகக்கவி; பண்டிதரின் உடல் நடுங்கியது: "என்ன? பண்டிதரே! அப்படியா? இது நீங்கள் எழுதியதல்லவா?" மன்னர் கேட்டார்! "நம் தமிழின் மேல் ஆணை! மன்னா! இது நான் எழுதியது தான்!" பலவீனமான குரலில் பகர்ந்தார், பண்டிதர்; அதோடு கேட்டார், கவிராயரைப் பார்த்து, "இது நீங்கள் எழுதியது என்பதற்கு என்னஆதாரம்? நான் எழுதிய இந்தப்பாட்டை,                                      
எந்த ஆதாரத்தை வைத்து, நீங்கள் எழுதியதாகச் சொல்கிறீர்கள்?"; "நீங்கள் எழுதியதாக எவ்வாறு சொல்கிறீர்கள்?" கவிராயர் கேட்டார்; "இதோ என் கையிலுள்ள இந்த ஓலை ஆதாரம்!" என்றார் பண்டிதர்; அடக்கமாகச் சிரித்த கவிராயர், "இந்த நியாயத்தைக் கேளுங்கள், மன்னா! பார்வை உள்ளவர்கள், ஓலையில் எழுதுவார்கள்! யாரோ எழுதிய பாட்டைக்கூட ஒரு ஓலையில் எழுதித் தங்கள் கையில் வைத்துக் கொண்டு, தாங்கள் எழுதியதாகக் காட்டுவார்கள்! ஆனால் என் போன்ற குருடர்களுக்கு அத்தகைய ஆதாரமெல்லாம் ஏது மன்னா?" என்றார்! "நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள்? அத்தகைய ஆதாரம் எதுவுமில்லையென்றால், நீங்கள் எழுதினீர்கள் என்று எப்படிச் சொல்வது?" மன்னர் கேட்டார்!
"மன்னா! எங்களுக்கு மனனப்பழக்கம் மட்டுமே! எழுத்துப் பழக்கம் கிடையாது!
இதோ நான் யாத்த அந்தப் பாட்டைக் கூறுகிறேன்! கேளுங்கள்! (அந்தகக் கவிராயர் பாடல் முழுவதையும் கூறி முடித்தார்) இதுதான் மன்னா! நான் யாத்து, அவர் எழுதி வைத்திருக்கின்ற அந்தப் பாட்டு! இல்லை! இல்லை!, அவர் தான் எழுதினார் என்று இன்னும் கூறுவாராகில், ஓலையை வைத்துவிட்டு, என்னைப் போன்று, அவரை மனப்பாடமாகக் கூறச் சொல்லுங்கள்! அவர் எழுதிய அந்தப் பாட்டு அவருக்குத் தெரியாமலா போகும்? அப்படிக் கூறினால், நீங்கள் அளிக்கும் தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார் கவிராயர்! "நீங்கள் சொல்வதும் சரிதான்! எங்கே! கூறுங்கள், பண்டிதரே! கேட்போம்!" என்றார், மன்னர்; நடு நடுங்கிய பண்டிதர், கவிராயரின் காலில் விழுந்தார், "கவிராஜ சிங்கமே! என் வாழ்வும் தாழ்வும் உங்கள் காலடியில்; நீங்கள் எது செய்தாலும் எனக்குச் சம்மதமே!" என்றார் தளர்ந்த குரலில்;
கவிராயர், அவரைத் தூக்கி நிறுத்தினார்! "கவலை வேண்டாம்! பண்டிதரே! உடற்குறையோ, புலமையோ நாமாகக் கேட்டுப் பெறுவதல்ல! அவை இறைவனால் நமக்கு அளிக்கப் படுபவை! அதை நினைத்து நாம் பெருமை கொள்ளலாம்! அதற்காக அவனுக்கு நன்றி செலுத்தலாம்! ஆனால் ஆணவம் கொள்ளல் ஆகாது! ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை ஒளிந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்தல் வேண்டும்! பாறையையும் குடைந்து, வேரைச் செலுத்துகின்ற மரத்தையும் வெட்டுகின்ற கோடரி வாழை மரத்தை வெட்ட இயலாது என்ற பாடல்களைக் கொண்ட நம் தமிழின் மீது ஆணையிட்ட தாங்கள், அந்தத் தமிழ் போதித்த அடக்க உணர்வு மற்றும் எளியோரை மதித்தல் போன்ற நற்பண்புகளை மறந்துவிட்டீர்கள்! இதை உங்களுக்குக் காட்டவே இவ்வாறு நடந்து கொண்டேன்! பொய்மையும் வாய்மையிடத்து; புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பது வள்ளுவன் வழி என்றாலும், பொய்யுரை பகர்ந்தமைக்காக நான் வருந்துகிறேன்! மன்னா! என்னை மன்னிக்க வேண்டுகிறேன்! உண்மையில் அப்பாட்டு அவர் எழுதியதே! உருவு கண்டெள்ளாமை வேண்டும், என்பதை இனி நம் புலவர் பெருமக்கள் உணர்வார்கள், என்று நம்புகிறேன்!" என்று முடித்தார் கவிராயர்;
இதில் ஒருவர் முறையாகக் காப்பியடித்தார்! மற்றொருவரால், அது அவரே எழுதியதாயினும், மனனப்பழக்கம் இல்லையாதலால் இயலவில்லை! அதன் பலனை அவரும் அனுபவித்தார்! இவரும் அனுபவித்தார்!

சில காப்பிகள், அது காப்பியா? ஒரிஜினலா? என்றே தெரியாமல் இருக்கும்!
யாரைப் பார்த்து, யார் அடித்த காப்பி என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!
எவ்வளவு புத்திசாலித்தனமாக, ஒரேமாதிரியாகக் காப்பியடித்திருக்கிறார்கள், என்று எண்ணி, பாராட்டத்தான் வேண்டும்!
அத்தகைய காப்பிகளைப் பார்ப்போம்!

தனக்குவமை இல்லாதான்!--இது வள்ளுவர்
விநாயகன்---வி நாயகன்--நிகரில்லாத தலைவன்-இது வட நாட்டவர்

பீலிபெய் சாக்காடும் அச்சிறும்;--இது வள்ளுவர் மொழி
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு;--இது நமது பழமொழி

புகழெனின் உயிரும் கொடுக்குவர்;--இது சுந்தரனார்
Seeking the bubble reputation,even in the cannon's mouth;--இது ஷேக்ஸ்பியர்

Spare the rod and spoil the child;--இது ஆங்கிலப் பழமொழி
அடியாத மாடு படியாது;--இது நம் பழமொழி

தங்கஊசி என்று அதைக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?-இது நம் மொழி
Poison is poison;Though it comes in golden cup;--இது ஆங்கில மொழி

At Rome like Romans:--இது ஆங்கிலத்தில்
நாடோட;நாமும் ஓட;--இது தமிழில்

நிலா! நிலா! ஓடிவா!--இது தமிழில்
Twinkle!Twinkle! little star!--இது ஆங்கிலத்தில்
மற்றும்
நள தமயந்தியும்; Mid summer night dreams- ம்

Romeo Juliet-ம்; அம்பிகாபதி அமராவதியும்;

பனி இல்லாத மார்கழியும்; December's snow-ம், போன்றவை!

நாடகமே உலகம்: இது தமிழ்!
All the world's a stage: இது ஆங்கிலம்!-இவை எல்லாம் யார் அடித்தது என்றே தெரியாத காப்பிகள்!

இவை, ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! (இதுவும் காப்பிதான்)
இப்படி இன்னும் எவ்வளவோ!

இனி, இது கம்பனில் அடித்த காப்பி; அது வள்ளுவனில் அடித்த காப்பி என்றெல்லாம் சொல்லாதீர்கள்! ஏனென்றால் காப்பியில்லாமல், எதுவும் சொல்லவும் முடியாது! எழுதவும் முடியாது! செய்யவும் முடியாது!

சிறிது காலத்திற்கு முன்பு நமது கைத்தொழில்களை, தலைமுறை தலைமுறையாக, அவரவர் குடும்பத்தினரே காப்பியடித்து, ஒரு குடும்பத் தொழிலாகவே செய்து வந்தார்கள்!
இப்போது யார் வேண்டுமானாலும் காப்பியடித்து, எந்தத் தொழிலையும் செய்யலாம், என்ற நிலை வந்துவிட்டது!
திரைப்பட வெளியீட்டாளர்கள், பழைய படங்களைத் திரையிடும்போது, "புத்தம் புதிய காப்பி" என்று தெளிவாகத் தெரிவித்தே விளம்பரம் செய்வார்கள்!
அது புதிய படமாகவே இருந்தாலும், அதன் படச்சுருள் ஒரு காப்பி தான் என்பதை மறைமுகமாகத் தெரிவித்து, அதை புதிதாகக் காப்பி அடித்திருக்கிறார்கள் என நேர்மையாக ஒப்புக் கொள்ளும் ஒரு செயலாகும்!இதுவும் காப்பிதான்! இந்த நேர்மை பாராட்டுக் குரியது!
சில தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளுக்கு, காப்பிரைட் உரிமை வாங்கி பதிவும் செய்துகொள்வார்கள்! எதிர்காலத்தில் காப்பி அடிப்பதற்கும் ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று அவர்கள் பயப்படுகிறார்கள், என்பதையே இது காட்டுகிறது!
இதுவரை நடை, உடை, பாவனைகளை மட்டுமே காப்பியடித்தோம்! இப்போது,
உயிரினங்களைக் கூட காப்பி எடுக்கும் குளோனிங் என்ற முறை நடப்புக்கு வந்து விட்டது!
எதெதெதற்கெல்லாம், காப்பி எடுக்கும் முறை வரப்போகிறதோ என்று எண்ணிப் பார்க்கும்போது, ஏதோ ஒரு பயம் வரத்தான் செய்கிறது!

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு! காப்பி என்பதை, துணிவாக ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மை வேண்டும்! (என்னையும் சிலரையும் போல) நான் தான் இந்தக்கருத்தைப் புதிதாகச் சொன்னேன், என்றோ, அல்லது இதை நானேதான் எழுதினேன் என்றோ பீற்றிக் கொள்ளக் கூடாது! அப்படிப் பீற்றிக் கொண்டால், அவர் காப்பியைக்கூட காப்பி எடுத்துத்தான் தெரிந்துகொண்டார், என்ற இழிவைச் சந்திக்க நேரிடும்! நான் எழுதியுள்ள எழுத்துக்கள், சேர்த்துள்ள படங்கள் ஆகியவையும் கூட ஏதாவது ஒன்றின் காப்பியாக இருக்கலாம்! என்ன? ட்ரிபிளிகேட் ஆகவோ அல்லது குவாட்ருபிளிகேட் ஆகவோ இருக்கும்! டூப்ளிகேட் என்று ஏன் சொல்லவில்லை என்றால் நான் காப்பி அடித்தது மற்றும் எடுத்தது எல்லாம், ஒருவேளை டூப்ளிகேட் ஆக இருந்தால்? எப்படி இருந்தாலும், எல்லாமே காப்பிதான்!

ஆகையால் தேவைக்குக் காப்பி எடுங்கள்! தேவைக்குக் காப்பியடியுங்கள்!
Copy என்றால் காப்பி எடுப்பதையும் குறிக்கும்! காப்பி அடிப்பதையும் குறிக்கும்!
ஆனால், எங்கே? எடுக்கவேண்டுமோ, அங்கே எடுக்க வேண்டும்!
எப்போது? அடிக்க வேண்டுமோ அப்போது அடிக்க வேண்டும்!

அதிகம் சொல்வானேன்? காப்பியே ஆங்கிலத்தில் நாம் அடித்த copy தான்!


A place and A time to copy! Not at all places and all times! வாழ்க! காப்பியடித்து, வெல்க!


                                                                                  


        

No comments:

Post a Comment