Pages

Monday, April 30, 2012

47 May day

வாழ்க!
மேதினம்!
-----------------




உழைத்தார்கள் உறங்காமல்,விழித்து அழவும்,
உழைக்காத எஜமானர் களித்து எழவும்,
ஒருநிலைமை இருந்ததது;அன்று ஓர்நாள்!
என்றதனை மாற்றியதே,மேமு தல்நாள்!

ஆடெனவும்,மாடெனவும் கொட்டில் தன்னில்,
அடைபட்டுப் புரண்டிருந்தார் அந்தோ! மண்ணில்!
அந்தநிலை மாற்றற்கு வந்த நாளே,
ஆண்டுதொறும் நாம் மகிழும் மேநன் னாளே!

உணவுக்குக் கைஎடுத்தால் சாட்டை கொட்டும்!
உரிமைக்குக் குரல் கொடுத்தால் உதிரம் சொட்டும்!
விலங்கோடு விலங்குகளாய் இருந்த நாளை,
விலக்கற்குத் தேர்ந்தாரே மேநன் னாளை!

ஓய்வில்லா உழைப்புக்கு ஊதி யத்தை,
உறுநோய்க்கு சிகிச்சை பெற மருத்து வத்தை,
உற்றதெலாம் வழங்கற்கு வந்த நாளே,
வாழ்த்தொலிகள் முழங்குகிற மேமு தல்நாள்!

வரிசையென வந்ததல்ல மேமு தல்நாள்!
பரிசாகத் தந்ததல்ல மேமு தல்நாள்!
உயிரினையும் பேறாக எண்ணா மற்றான்,
உள்ளதெலாம் ஆறாகச் சிந்திப் பெற்றார்!

கடமைகளைச் செய்யாமல் உரிமை இல்லை!
உரிமைகளை எய்தாமல் கடமை இல்லை!
விதியாகச் செய்தாரே! முன்னோர் அன்று!
விதிகளையே போற்றிடுவோம்! உயர்வோம்! நன்று!

கடமைகளை ஆற்றிடுவோம்! முன்னே என்றும்,
உரிமைகளைக் கேட்டிடுவோம்! பின்னே என்றும்,
உறுதிதனை ஏற்றிடுவோம்! ஒன்றாய் நின்று!
உயர்தற்குச் சூளுரைப்போம்! பொன்னாள் இன்று!



No comments:

Post a Comment