Pages

Saturday, June 16, 2012

61 I go on for ever


                                                                                                                                    
நான்போய்க்கொண்டேஇருக்கிறேன்!.................




சிறு வயதில் நான் படித்த ஒரு ஆங்கிலக் கவிதை பற்றியது இது! அப்போது படித்த எத்தனையோ நல்ல கவிதைகளை நான் மறந்து விட்டேன்!அவற்றில் சிலமட்டுமே இன்னும் நினைவில் நிற்கின்றன! இது மட்டும் சிறப்பாக என் நினைவில் நிற்கக் காரணம், என் நண்பர்கள் அவ்வப்போது, மேற்கோள் காட்டுவதற்கு, இந்த வரிகளைப் பயன்படுத்துவார்கள்! ஆனால், அதன் ஆழத்தை அவர்கள் தொட்டதில்லை!அந்த வரிகள் இதுதான்!
"Men may come and men may go;
But, I go on for ever".
"மனிதர்கள் வருவார்கள்; போவார்கள்; ஆனால் நான் மட்டும் ஓடிக் கொண்டே இருக்கிறேன்" என்பது இதன் பொருள், என்று நீங்கள் அறிவீர்கள்!
ஆனால், இதைச் சொல்வது யார் ( எது ) தெரியுமா? ஒரு ஓடை! இந்தக் கவிதையின் தலைப்பு "Brook" என்பதாகும்! brook என்றால் ஓடை!
ஓடைகள் பல சேர்ந்து, ஒரு சிற்றாறாகி, சிற்றாறுகள் பல சேர்ந்து ஒரு பேராறாகின்றது,! இன்றைய ஆறுகளும் கூட அவ்வாறு சொல்லும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை, என்கின்றபோது, "நான்மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்", என்று ஒரு சிற்றோடை எவ்வாறு கூறமுடியும்?
ஓடையை ஆற்றுக் குழந்தை என்று வைத்துக் கொள்வோம்! குழந்தை வளர்ந்து பெரிதாகும்! அதுபோல் அந்த ஓடையும் வளர்ந்து ஆறு ஆகும்! அதனால், அது ஆறுதான்! ஆனால் அப்படிக் கூறும் நிலையில், ஆறுகள் உள்ளனவா? எண்ணிப் பாருங்கள்!

போர்ப்பரணி பாடி, ஆரவாரித்துச் செல்லும் வீரர்தம் பேரிரைச்சலென,நீர்ப்பரணி பாடி, ஆர்ப்பரித்துப் பொங்கிப் பெருகி, நெல்லை பூமியின் வயல்களில், பாய்ந்து, நெல்லை விளைவிக்கும் பொருனை நதியாம் தாமிரவருணியும் இன்று கருணையற்றுப் போய், நம்மைக் கைவிட்டு விட்ட நிலை!

வையம் காக்கும் எம் ஐயை! எம் வையை நீ வாழி, நீடூழி! எனப் பாண்டி நாட்டுப் பைந்தமிழ்ப் புலவர்கள் அன்று பாடிப் பரவிய, வைகையும் இன்று ஐயகோ என்னும் நிலைக்கு ஆளாகி விட்ட அவலம்!

குறிஞ்சியிற் தோன்றி, முல்லையிற் பாய்ந்து வந்து, தென்தமிழகத்தின் பெரும்பாகத்தை, மருதமாக்கிய பெரியாறு, மறுபடியும் நம் தமிழகத்தைப் பாலையாக்கிடுமோ என்று நம்மைப் பதைக்க வைத்துவிட்ட துயரம்!

பையத் தவழ்ந்து, மெள்ளப் பசுமை பரப்பி, போகுமிடமெல்லாம், பூவிரிச் சோலைகளை வாரி வாரி இறைத்து, தஞ்சை பூமியை நஞ்சை பூமியாக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்னும் பேரை, வழங்கிய காவிரிக்கும், இன்று நாவறட்சிக்குக் கூட நீர் தர முடியாத நிலை! கர்னாடகத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்ற நிலை!

தேனாகப் பாயுமாம் பாலாறு! அதில் மீனாக மேயுமாம் பலநூறு! என்று பண்டைத்தமிழர் பாடிமகிழ்ந்த, பாலாறு இன்று மணலாறாக மாறிவிட்ட கொடுமை!

ஆபத்துக்குக் கை கொடுத்த கிருஷ்ணனைப் போல், தாகத்துக்குத் தண்ணீர் தந்த,கிருஷ்ணா, கோவிந்தாவாகி விடுமோ ? என்ற கவலை!

எங்கோ போகிறாள் கங்கை, என்று திசை மாறிவிட்ட கங்கையைப் பார்த்துப் பாட வேண்டிய கோலம்!

ஜீவ நதிகளாம் சிந்துவும், யமுனையும், நர்மதையும், தபதியும், கோதவரியும், பிரம்மபுத்திராவும், மழை அடித்தால் தண்ணீர்! வெயில் அடித்தால் கண்ணீர், என்று பாவ நதிகளாகிவிட்ட பரிதாபம்!



ஆப்பிரிக்காவின் காங்கோவும், அமெரிக்காவின் அமேசானும், ரஷ்யாவின் வால்காவும், பாய்ந்தால் நீரென்றும், காய்ந்தால் மணலென்றும் ஆகி விட்ட அலங்கோலம்!

லண்டன் மாநகரத்துத் தேம்ஸ் நதியோ, நோய்க்கிருமிகள் தவழும் ஜெர்ம்ஸ் நதியாக மாறிவரும் துக்கம்!

என ஆறுகள் அத்தனையும் மழை பெய்தால் ஓட்டம், இல்லையெனில் வாட்டம் எனத் தங்கள் நெடிய ஓட்டத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே நிறுத்தத் தொடங்கி விட்டன!
இனியும் அவை, நாங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறோம் என்று பாட முடியுமா?அவ்வாறு பாடும் தகுதி இந்த நதிகளுக்கு மட்டுமல்ல! வேறு யாருக்கும் இல்லை!
ஆனால் ஒன்று மட்டும் அவ்வாறு பாடவும், ஏன் ஆடவும் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறது! அது எது? சிந்தியுங்கள்!

Men may come; and men may go;
But the TIME goes on for ever.

ஆம்; அது "காலம்". வேறு யாரும் வரலாம்; போகலாம்; அவர்களின் இயக்கத்தை யார் வேண்டுமானாலும் நிறுத்தலாம்! ஆனால் காலத்தின் ஓட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்தல் ஆகாது!
காலத்தின் பெருமையைப் பலரும் விவரித்திருக்கிறார்கள்!
வள்ளுவர், இதற்கு 10 குறட்பாக்களைப், பயன்படுத்தி இருக்கிறார்!
"பகல்வெல்லும் காக்கையைக் கூகை இகல்வெல்லும்;
வேந்தர்க்கு வேண்டும் பொழுது" அவற்றுள் ஒன்று!
The man waits for time; but the time waits for no man.
காலத்துக்காக மனிதன் காத்திருக்கிறான்; ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!
The time changes purple into rags and rags to purple.
காலம் வறியவனைச் செல்வனாக்குகிறது! செல்வனை வறியவனாக்குகிறது!
மேட்டை மடுவாக்குகிறது! மடுவை மேடாக்குகிறது!
காலம் சிறிது! கனவுகள் பெரிது! என்னும் சொற்றொடர் மனிதனின் இயலாமையை நன்கு பறை சாட்டுகிறது!
காலத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றே, மனிதன் அதை நொடி, நிமிடம்,மணி, நாள், வாரம், மாதம்,வருடம் என்று கணக்கிட்டுப் பார்த்தான்! அந்த கணக்குக்குள் அது அடங்காமல் அவன் தோற்றான்!
இரவு, பகல் என்றும், கோடை, குளிர் என்றும், வருகின்ற அத்தனை மாற்றங்களும் காலத்தின் செயல்களே!
இந்த பூமியிலுள்ள மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் காலத்தின் கட்டுப்பாட்டிலேயே பிறக்கின்றன! இறக்கின்றன!
ஒவ்வொரு உயிரினத்துக்கும், கரு கர்ப்பத்தில் இருப்பது, ஒரு காலக் கணக்கில்!
வளர்வது, பருவமுறுவது, பூப்பது, காய்ப்பது, கனிவது ஆகியன அனைத்தும் ஒரு காலக் கணக்கில்!
அவை மண்ணில் வாழ்வது, இவ்வளவு என்பது ஒரு காலக் கணக்கில்!
இவை அனைத்தும் காலத்தின் ஓட்டத்தாலேயே நடைபெறுகின்றன!
இவ்வாறாக, இந்த பூமியானது காலத்தின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகிறது! அதில் வாழும் உயிரினங்களும் காலத்தின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகின்றன!
சரி! இந்தக் காலத்தின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியுமா?-------முடியுமா?

முடியும்!
இந்த பூமி, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருவதாலேயே, இந்த காலமாற்றம் ஏற்படுகிறது!
அதனால் பூமியின் இந்தச் சுழற்சியை நிறுத்தவேண்டும்! அது சூரியனைச் சுற்றி வருவதை நிறுத்த வேண்டும்! முடியுமா? இது முடியுமென்றால், அதுவும் முடியும்!
ஒருவேளை அது முடிகிறது என்றே வைத்துக் கொள்வோம்! அவ்வாறு பூமியின் இயக்கம் நின்றுவிடுமானால், பூமியிலுள்ள உயிரினங்களின் இயக்கமும் நின்றுவிடும்! ஏனென்றால் அவ்வாறு நிற்கும்போது, ஒருபுறம் தாங்க முடியாத குளிரும், மறுபுறம் தாங்க முடியாத வெப்பமும், உயிரினங்களை அழித்து விடும்! இவ்வுலகில் ஜீவராசிகளே இல்லாமற் போய்விடும்! அதனாலேயே பூமி இயங்குகிறது! இயக்கம் பூமிக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் அவசியம் என்பதையே இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது! ஓடிக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்வதற்குக் காலம் ஒன்றுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது!
எனவே, காத்திருக்காத காலத்தை,
ஓடிக்கொண்டே இருக்கும் காலத்தை,
நாம் வாழக் கிடைத்த இந்தக் குறுகிய காலத்தை,
விலைமதிப்பில்லாத காலத்தை,
வீணாக்காமல், பயனுள்ள வழிகளில் செலவிட்டு, செல்வமும், உயர்வும் பெற உழைப்போம்!

"ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்,
கருதி இடத்தாற் செயின்".
                                                           


    

No comments:

Post a Comment