நமது முன்னோர்கள் சொல்லியுள்ள விஷயங்களின் தொகுப்பு ! இது காதல் கடிதம் அல்ல ! ஆனால் கடிதம் தான் !
கொஞ்சம் சாயம் பூசி இருக்கிறேன் ! ! யாருக்கு
எழுதப் பட்டது , என்று கண்டுபிடியுங்கள் , பார்ப்போம் !
1
அன்பே ! எவர் ஒருவரையும்
விட்டுவைக்காமல் , அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டுவதால் , உன்னை அன்பே என்றேன்
; எந்நிலையிலும் நேர்மை தவறாத நீதியரசர் உன் தந்தை ! பரிந்துரை கையூட்டு பச்சாதாபம் ஆகிய
எவற்றுக்கும் பணிந்துவிடாத நல்ல நிர்வாகம் உங்கள் ஆட்சியில் ; பாயும் , பகையுமே
உங்கள் பரிவாரங்கள் ! எல்லையற்று பரந்து விரிந்த , நிலையான ஒருஅமைதி
சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி நீ ! ஆனாலும்
முடிசூடிக்கொண்ட , ஒரு மஹாராணிக்குரிய சகல அதிகாரங்களையும் உடையவள் நீ ! எஃகினால்
ஆனதல்ல ; ஆனாலும் , உள்ளிருந்து , யாரும்
தப்பிவிட முடியாத கோட்டை உன் கோட்டை ! உனது வயது என்னவென்று எவருக்கும் தெரியாது !
ஆனாலும் நீ இளையவள் ! உனது மூத்தவளுக்கோ எப்போதுமே ஒரே வயது தான் ; கண்ணே ! கண்ட அளவிலேயே தண்டனையை முடிவு செய்யும்
கண்கள் உன்னவை என்பதால் க்ண்ணே என்றேன் !
பிறப்பின் மூல விதையே நீதானென்று , தத்துவம் சொல்வார்கள் : ஆனால் அந்த விதை
முளைக்காமல் இருக்க என்ன வழி என்று யாரும் பக்குவம் சொல்லவில்லை ! நீ இல்லாத வாழ்வே பெருவாழ்வு என்று சிலர் பிதற்றுவார்கள்
; ஆனால் நீயே தான் அந்தப் பெருவாழ்வு என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்
அவர்கள் ! உன்னைப் படுகுழி என்று சொல்லிப்
பிறரைப் பயமுறுத்துவார்கள் ; அதைவிடப் பெரும்பள்ளங்களைப் பாராதவர்கள்
அவர்களாயிருப்பார்கள ! இன்பமே ! பேரின்பத்திலும் பெரும் இன்பமான உன் மயக்கம்
என்னை அப்படி அழைக்க வைத்தது ! காதலை
முன்னிறுத்தியும் , உன்னைப் பின்னிறுத்தியும் , கவிதை பாடினான் , கவிஞன் ஒருவன் ;
உன் அருமை தெரியாதவன் ! உன்னையல்லவா , அவன் முன் நிறுத்தியிருக்க வேண்டும் ?
துரக்கமாகிய உன்னை , உறக்கத்துக்கு ஒப்பிட்டுப் பாடினான் , வேறொரு புலவன் ! உனக்குப் பின்னே தான் துரக்கமென்று ,
உணராதவன் ! குறிப்பிட்ட நேரத்தில் , நீ வருவதால் , உன்னைக்
காலம் தவறாதவள் என்று குறிப்பிடலாம் ! நான் நினைத்த நேரத்தில் நீ
வருவதில்லையாதலால் , தாமதிக்கப் பட்ட நீதி என்று , உன்னை எடுத்துக் காட்டலாம் !
ஆண்டான் அடிமை என்று
எவருக்கும் நீ வேறுபாடு காட்டுவதில்லையாகையால் , உன்னைச் சமநீதியரசி என்றும்
சொல்லலாம் ! எல்லோருக்கும் ஒரு துணை வேண்டும் என்பார்கள் ! ஆனால் , நீயும் உன் முன்னவளும் மட்டும்தான்
துணைக்கு என்று வேறு யாரும் தேவை இல்லாதவர்கள்
!
கேள்வி இன்னும்
முடியவில்லை ….
2
தென்றலே ! உன்
அணைப்பின் அமைதி தரும் குளுமை தென்றலைப் போன்றது என்பதால் , தென்றலே என்றேன் ! உன்னைப் பார்க்காமலேயே உன்னைப் பார்த்துச்
சிரித்ததாக சிலர் ஜம்பம் பேசுவார்கள் ! அவர்கள் உன்னைப்பார்த்திருந்தால்
திரும்பியே இருக்க மாட்டார்கள் ! ஏன் எனில் உன் பிடி அப்படி ! உன் அணைப்பின் வலி
கொடுமையானது என்று எல்லோரும் பயப்படுகிறார்கள் ; வாழ்க்கையின் நொடிகளில் விழும்
அடிகளின் வலி அதைவிடக் கொடியது என அறியாதவர்கள் அவர்கள் ! என்மூச்சுக்
காற்று உன்னோடு , கலக்கும்போது பெறும் ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகுமா ? எல்லோரும்
உன்னைக் கண்டு கலங்கி அழுவர் என்ர நிலையில் , யுத்த பூமியில் , கட்டித் தழுவி
உன்னை முத்தமிட்டு மகிழும் , போர்வீரர்களுக்கு அடுத்தபடியாக உன்னில் கலந்து
மகிழும் முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்
! ஆனால் ஒரு சிலரோ வலுவில் உன்னை அடைந்துவிட்டதாகக் கூறிக் கொள்வர் ! உன் அனுமதி இல்லாமல் அடைந்துவிட்ட
அவர்களால் உன்
கன்னித் தன்மைக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக நான் கருதவில்லை ! உயிர்களெல்லாம்
உன்னுள் அடக்கம் என்றாலும் , உன் அடக்கம் , வேறு யாருக்கும் வருவதில்லை !
ஏனென்றால் , நீ உன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை
! அன்பே ! தாயின் அரவணைப்பில்
கிடைக்கும் இதமும் , தாரத்தின் அணைப்பில் கிடைக்கும் கதகதப்பும் , உன்னிடம்
மட்டுமே கிடைக்கும் ! வேறு யார் தரும்
சுகமும் , நீ தரும் சுகத்திற்கு ஈடாவதில்லை
! ஏனென்றால் , சுகம் தரும் அத்தனையையும் , சுவீகரித்துக் கொண்டவள் நீ ! நீ என்ன அவ்வளவு கோரமானவளா ? உன்னைப்
பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் ! புறத்தைப் பார்த்த அவர்கள் உன் அகத்தைப்
பாராதவர்கள் ! உன்னை இப்படியெல்லாம் வர்ணிக்கும் என் புகழ்ச்சியில் , மயங்கி என்னை
மறந்து விடாதே ! புகழ்ச்சியின் போதையில்
மயங்குபவளல்ல நீ ! ஆயினும் சொல்லி வைத்தேன்
! காலம் கனியட்டும் !
காத்திருப்போம் , அதுவரை ! என்ன நெளிகிறாய் ? அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து
விட்டேன் என்றா ? இல்லையா ? பின் ஏன் ? …..என்ன ? இவ்வளவு சொல்லியும் , நீ யார்
என்று தெரியாமலும் , புரியாமலும் , ஒருவனா ? ஐயோ ! பாவம் அவன் ! விட்டு விடு ! போகட்டும் ! உன்னை நினைக்கவும் , உன்னை
நெருங்கவும் ,அவனுக்கு வயதும் அனுபவமும் போதாது ! என்று நினைக்கிறேன் ! அதுவரை
காத்திரு ! உனக்குத்தான் தெரியுமே ! அவனுக்கு இன்னும் நேரம் வரவில்லையென்று ! அனைத்து நாட்டுச் சட்டங்களின் படியும்
குற்றம் என்று தெரிந்தும் உன்னை வலுவில் அடையத் துணிகிறார்கள் சிலர் ! என்ன செய்தாலும் , விதி விடாது ; அவர்களின்
வினை எப்போதும் பின் தொடரும் என அறியாதவர்கள் ! அதிலிருந்து மீள வழி தேடாதவர்கள் ! வாழ்க்கையை
எதிர்கொள்ளத் துணியாத கோழைகள் !

No comments:
Post a Comment