ஒளி ஏற்றுவீர்!
திக்கெட்டும் ஒளிரவெனத் தீபஒளி ஏற்றுவீர்!
திக்கற்றவர் போற்றுவீர்!
தீயட்டும் தொல்லையெனத் தீமைகள் மாய்ப்பீர்!
தொலையாத பகைமை சாய்ப்பீர்!
புக்கிட்ட சிறுமைகள் களைகளெனத் தள்ளுவீர்!
புதுமைகள் பல கொள்ளுவீர்!
புல்லர்தம் கொட்டத்தைப் புறம்காண ஓட்டுவீர்!
பூமிதனில் அறம் நாட்டுவீர்!
சிக்குற்ற நம்வாழ்வு செழுமைபெறச் செய்குவீர்!
சீருற்ற வள மெய்துவீர்!
செயலற்று நில்லாமல் புயலாக வருகுவீர்!
சிறந்தோம் எனப் பகருவீர்!
வக்கற்ற வர்மகிழ வாய்ப்புகள் வழங்குவீர்!
வாழ்வில்ஒளி என விளங்குவீர்!
வயிற்றுக்கு உணவுதரும் வழிகளை எண்ணுவீர்!
வாஞ்சையது மிக நண்ணுவீர்!
இரப்பவரும் இல்லையெனச் சொல்லுநிலை வகுப்பீர்!
இல்லாரின் துய ரறுப்பீர்!
இனிமையாய் வாழவென இலக்கணம் தொகுப்பீர்!
இன்னலும் வரின் பொறுப்பீர்!
பிறப்பெவரும் பேதமென வைப்பதிலை அறிவீர்!
பண்பினால் எனப் பகர்வீர்!
பழியற்ற வழிபோகின் பரவிடுவர் அறைவீர்!
பாங்குகள் பல நுகர்வீர்!
உறக்கமது மீறினால் சிறப்பிலை உணர்வீர்!
உற்றவழி நீர் கொணர்வீர்!
உண்மையை உண்மையாய்ப் பேசினால் உயருவீர்!
உதறினால் நீ ரயர்வீர்!
அரக்கமனம் மாய்கவென அறைகூவல் விடுப்பீர்!
அன்புடைமை கை யெடுப்பீர்!
அனைவரும் ஒன்றுஎன ஆன்றமொழி உரைப்பீர்!
அறியாமை தனை மறைப்பீர்!
ஒளிபோற்றும் நாளதனைத் தீபாவளி என்று,
உவந்திடுவர் நமது முன்னோர்!
ஒலிஏற்றி மருளகல உற்றார்கள் அன்று,
குவிந்திடுவர் நமது முன்னர்.
சத்தான இனிப்புவகை சுவைகள்பல ஈந்து,
சந்தோஷம் மிகத் தரட்டும்!
புத்தாடை உள்ளுக்குள் புத்துணர்ச்சி தந்து,
புன்னகை கொண்டு வரட்டும்!
முத்தான நகைசிந்தி மழலையர் திகழ,
மூத்தோரும் கண்டு மகிழ,
கொத்தாகக் குடும்பத்தார் அனைவரும் புகழ,
குதூகலம் பொங்கி வாழ,
இனமென்றும் மொழிஎன்றும் பிரிவினை மறந்து,
இன்புற்று உலகு மீள,
எல்லோரும் ஒன்றுஎன ஒருமையை உணர்ந்து,
இனிதாக என்றும் வாழ,
அழைப்பீர் வருகஎனக் கரங்களைச் சேர்ப்பீர்!
ஒளிர்ந்திடும் இந்த நாளே!
உழைப்போம் உயரவென, உறுதிகள் ஏற்பீர்!
வளர்ந்திடும் நமது நாடே!

No comments:
Post a Comment